2016-01-06 15:10:00

வட கொரியா ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை


சன.06,2016. ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்தியதாக வெளியான வட கொரியாவின் அறிவிப்பை தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு அவை அவசரக் கூட்டத்தை இப்புதனன்று ஏற்பாடு செய்தது.

இதில் ஐ.நா. பாதுகாப்பு அவையின் 5 நிரந்தர மற்றும் 10 தற்காலிக உறுப்பினர்கள் உட்பட 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்கின்றனர். இந்த அவசரக் கூட்டம் மூடிய கதவுகளுக்குள் ரகசியமாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து வந்த வட கொரியா, கடந்த 2006ஆம் ஆண்டு தனிமைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்றைய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், தொடர்ந்து அதிருப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வட கொரியா தொடர்பாக முக்கிய முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சோதனையால், வட கொரிய அணு ஆயுத சோதனைக் கூடம் அமைந்துள்ள பகுதியில் செயற்கையாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த 2006, 2009, 2013 ஆகிய ஆண்டுகளில் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு அவையின் வர்த்தக மற்றும் நிதி தடைகளுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.