2016-01-07 16:26:00

திருத்தந்தை பிரான்சிஸ், வர்த்தக முயற்சிகளுக்கு எதிராளி அல்ல


சன.07,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வர்த்தக முயற்சிகளுக்கு எதிராளி அல்ல, மாறாக, வர்த்தக சந்தையை கடவுளுக்கு இணையாக்கி, இலாபம் ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாக மாற்றும் போக்கையே அவர் எதிர்க்கிறார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சனவரி 5, இச்செவ்வாய் முதல், 7, இவ்வியாழன் முடிய சிலே நாட்டின் Universidad de los Andes என்ற பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு மேலாண்மைக் கருத்தரங்கில், இப்புதன் மாலை உரையாற்றிய, திருப்பீட நீதி அமைதி அவைத் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

‘வர்த்தகமும், சமுதாயமும் விடுக்கும் நன்னெறி சவால்கள்’ என்ற தலைப்பில், கர்தினால் டர்க்சன் அவர்கள் அளித்த உரையில், மனித மாண்பையும், பொது நலனையும் முன்னிறுத்தும்போது, வர்த்தகம், சிறந்த பணியாற்றும் ஓர் அழைப்பாக மாறுகிறது என்று கூறினார்.

பொருள்களின் உற்பத்தி, பயன்பாடு ஆகிய நிலைகளில், பேராசைக்கு இடம் தராமல், தேவையான அளவு உற்பத்தி, பயன்பாடு என்ற நிலை உருவானால், மனித சமுதாயம் முன்னேற வாய்ப்புண்டு என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

பூமிக்கோளத்தின் இயற்கை செல்வங்களைப் பயன்படுத்துதல், அடுத்தத் தலைமுறைக்குத் தகுதியான ஒரு பூமிக்கோளத்தை விட்டுச் செல்லுதல் போன்ற விழுமியங்களை வர்த்தக உலகம் பின்பற்றினால், உலகம் இன்னும் மேன்மையான நிலையை அடையும் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.