2016-01-11 15:31:00

வாரம் ஓர் அலசல் – எழுச்சிமிகு இளைய சமுதாயம்


சன.11,2016. எம் அன்புக்குரிய நேயர்களே, இளையோர் நலனுக்காக, துணை ஆட்சியர் பணியைத் துறந்த இளைஞர் என்ற தலைப்பில் இஞ்ஞாயிறன்று தினசரிகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருப்பவர் 24 வயதான இளைஞர் ரோமன் சைனி. எம்.பி.பி.எஸ். மருத்துவம் படித்துள்ள இவர், தன்னைப்போல வாழ்க்கையில் அனைவரும் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கில், தான் வகித்து வந்த துணை ஆட்சியர் பதவி மற்றும் எம்.பி.பி.எஸ். பட்டத்தையும் பொருட்படுத்தாமல், இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் unacademy.in என்ற இணையதளத்தை உருவாக்கி, அதன்மூலம், இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார். இந்த இணையத்தில் யூடியூப்பின் மூலம், இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் பாடத்திட்டங்களையும் வழங்கி வருகின்றார் ரோமன் சைனி. இவரும், தனது நண்பருடன் இந்த இணையதளத்திலேயே முழுமையாக ஈடுபட்டு வருகின்றார். unacademy.in, முகநூல் பக்கத்தில் இதுவரை 64 ஆயிரம் பேரும். டுவிட்டர் பக்கத்தில் 20 ஆயிரம் பேரும் பின்பற்றி வருகின்றனர் என்று ரோமன் சைனி அவர்கள் கூறியிருக்கிறார்.

அன்பர்களே, இளையோரின் தன்னலமற்ற சேவைகளையும், சக்தியையும் சென்னை வெள்ளக்காடானபோது நாம் அறிந்து மெய்சிலிர்த்தோம். சென்னையில் வெள்ளம் வந்த அன்று சைதாப்பேட்டையில், ஓர் அடுக்குமாடி கட்டடத்தின் கீழ்தளத்தில் வாழ்ந்து வந்த அறுபது வயது சரஸ்வதி அம்மாள் சொன்னார்..

கண்மூடிக் கண் திறக்கறதுக்குள்ள வீட்டுக்குள்ள தண்ணி மட்டம் மளமளன்னு ஏற ஆரம்பிச்சுடுச்சு. சக்கர நாற்காலியிலேயே அங்க இங்க போய் வருவேன். அன்னிக்குப் பார்த்து மகனும் மருமகளும் வெளியூர் போயிருந்தாங்க. அதனால, வெள்ளம் வந்ததும் பதறிப்போயி கூச்சல் போட்டேன். சத்தம் கேட்டு, மேல் வீட்டுலேர்ந்து ஒரு 20 வயசுப் பையன் இறங்கி ஓடி வந்து, என்னை வீல் சேர்லேர்ந்து அலாக்கா எடுத்து, மூணாவது மாடி வரைக்கும் தூக்கிட்டுப்போய் விட்டான். ஆனா, அந்தப் பையனை எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. ஏன்னா, போக வர என்னை கேலியும் கிண்டலும் பண்ணிட்டே இருப்பான். வீல் சேர்ல இடிச்சுட்டு ஓடுவான். ஆனா, அவன்தான் அன்னிக்கு என் உசுரைக் காப்பாத்தினான். நான் எவ்ளோ குண்டுன்னு பார்க்கல... இந்த உடம்பைத் தூக்கிக்கிட்டு ஒரு இருபது வயசுப் பையன் மூணு மாடி ஏறணும்னா, அவனுக்குள்ள எத்தனை வைராக்கியம் இருக்கணும் என்னைக் காப்பாத்தணும்னு? அவனுக்கென்னப்பா தலையெழுத்து! ஆனா, கூப்பிட்ட குரலுக்கு பகவான் மாதிரி ஓடி வந்தானே! அப்பத்தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுச்சு. பசங்களைக் குறை சொல்லிப் பிரயோசனமில்லை. அவங்க வயசு அப்படி. ஓடி ஆடுற வயசு. அவங்களோட எனர்ஜியை நாம தான் நல்ல விதத்துல பயன்படுத்திக்கணும்.

ஆம். இளையோரின் ஆற்றலை சமுதாயம்தான் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். தமிழ் ஊடகப் பேரவையும், இந்நேரம்.காம்(inneram.com) இணைய இதழும் இணைந்து வருகிற பொங்கல் பண்டிகையின்போது 'ஈரம்' என்ற ஆவணப்படத்தை வெளியிடவுள்ளது. காலம் காலமாக துப்புரவு பணியில், குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே ஈடுபட வேண்டும் என்ற சமூக அமைப்பை உடைத்திருக்கிற சென்னை வெள்ளத்தில் நிறைய இளைஞர்கள், தாங்களாகவே முன்வந்து, துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு சென்னை வெள்ளத்தில் ஓடி ஓடி உதவிய இளையோர் பற்றி இந்த ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறதாம்.

அன்பர்களே, சவாலான முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள் சில நேரம் தோல்வியுற்றாலும், அவர்களை நாம் தட்டிக்கொடுக்க வேண்டுமே தவிர, தண்டிக்கக்கூடாது. 2014ம் ஆண்டு நவம்பரில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மக்கள் தொகை நிதி அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, உலகில் பத்துக்கும் 24 வயதுக்கும் உட்பட்ட இளையோர் 180 கோடி. உலக இளையோரில் 89 விழுக்காட்டினர், அதாவது பத்துப் பேருக்கு ஏறக்குறைய ஒன்பது பேர் வளரும் நாடுகளில் வாழ்கின்றனர். இந்தியாவில் மட்டும் 35 கோடி இளையோர் உள்ளனர். இந்த இளையோர், உலகப் பொருளாதாரத்தைச் சிறந்ததாக அல்லது மோசமானதாக மாற்றும் திறனைக் கொண்டிருக்கின்றனர். இளையோர்க்கு பாதுகாப்பான நலவாழ்வு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் வழங்கப்படாவிட்டால், நாடுகளின் உறுதியற்ற தன்மைக்கு இது அச்சாரமிடும் என்று அந்த ஐ.நா. அறிக்கை எச்சரித்தது. தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு கட்சிகள் வழக்கமான வேலைகளைத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், சென்னை எத்திராஜ் கல்லூரியில், கண்ணியமான தேர்தல் என்ற பிரச்சார தொடக்க நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய, அறிவியல் நகர துணைத் தலைவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் அவர்கள், மாணவ, மாணவிகள்தான் நாட்டின் மாற்றங்களுக்கு வித்திடுகிறார்கள். தேர்தலைக் கண்ணியமாக நடத்தும் புரட்சி, மாணவிகளிடம் இருந்து தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் கண்ணியமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தேர்தல் நேர்மையாக நடப்பதற்கு மாணவ இளைஞர் சக்தி உறுதுணையாக இருக்கவேண்டும். மாற்றம் கொண்டுவரக்கூடிய மகத்தான சக்தி மாணவர்களே..... என்று பேசினார்.

அன்பர்களே, இந்திய தேசிய இளையோர் திருவிழா, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12, இச்செவ்வாயன்று கொண்டாடப்படுகின்றது. இவ்வாண்டு இளையோர் திருவிழா, 5 நாட்கள் கொண்டதாக சட்டீஸ்கர் மாநிலத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த இளைஞர் திருவிழாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள், நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களை இளைய தலைமுறையினர்களிடமிருந்து பெறும்பொருட்டு மொபைல் அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேசனின் உதவியுடன், இளைஞர்கள் தலைமையில் வளர்ச்சி, திறன், மேம்பாடு, கல்வி, புதுமைகள் உள்ளிட்ட விவகாரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறி்த்தும் அதில் தங்களின் பங்களிப்பு குறித்தும் விரிவான கருத்துக்களை அளிக்க இளைஞர்களை வரவேற்பதாக, பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் நாம், அவர் நியூயார்க் நகரிலிருந்து 1894ம் ஆண்டு, நவம்பர் 19ம் தேதி சென்னை இளையோர்க்கு எழுதிய நீண்ட கடிதத்தின் சிலவரிகளைக் கேட்பது இன்றைய இளையோர்க்கு ஊக்கத்தை அளிக்கும். என் வீர இளைஞர்களுக்கு என்று கடிதத்தைத் தொடங்கியுள்ள சுவாமி விவேகானந்தர்....

“அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும், வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே! மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும்; ஏழை எளியவர்கள், பாமரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக உங்கள் மனம் மிகவும் உருக வேண்டும். மற்றவர்களின் நன்மையின் பொருட்டு உங்கள் இதயமே நின்று, மூளை குழம்பி, உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்ற நிலை வரும் வரையில் மற்றவர்களுக்காக நீங்கள் மனம் உருகுங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் ஆன்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும்.

முயற்சி செய்யுங்கள்! முயற்சி செய்யுங்கள்! என் குழந்தைகளே! பயப்படாதீர்கள்! பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழால் பயனில்லை, கல்வியால் பயனில்லை. அன்பு ஒன்றுதான் பயன் தருகிறது; ஒழுக்கம் ஒன்றுதான் துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து நம்மை முன்னேறச் செய்கிறது. சுதந்திரம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது. நமது முன்னோர்கள் ஆன்மிகச் சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள். வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம் தேவைப்படுவதுபோல் உணவு, உடை, திருமணம் முதலிய ஒவ்வொரு விடயத்திலும் மற்றவர்களுக்குத் தீமை செய்யாத அளவில் மனிதருக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு உணவு தர வேண்டும், கல்வியைப் பரப்ப வேண்டும், சமுதாயத்தில் கொடுமைகளை அகற்ற வேண்டும். ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்றுகூட வீசக் கூடாது; செயல்முறையில் குற்றத்தின் நிழல்கூடப் படியக் கூடாது. பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது. ஊக்கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்டும். முன்னேறிச் செல்லுங்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்! எதுவும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது! உண்மைக்குப் புறம்பான எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். இந்தியாவின் எதிர்காலம் உங்களையே நம்பியிருக்கிறது…..”

அன்பர்களே, இந்திய தேசிய இளையோர் தினத்தன்று, இளையோர்க்கு இதைவிட வேறு அறிவுரை அவசியமில்லை. இளையோரே, உங்கள் சக்தியை நீங்கள் அறிவீர்கள். எழுச்சிமிகு சமுதாயத்தை அமைப்பதற்கு கரம் கோர்த்துச் செயல்படுங்கள். நீங்கள் மனம் வைத்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்க முடியும்.

“இளையோரே, உங்கள் மனம் என்ன சொல்கிறதோ, எதைச் செய்ய வேண்டும் என்று உங்கள் உள்ளம் துடிக்கிறதோ அதைச் செய்யுங்கள். உங்களால் நிச்சயம் அதை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும். எதையும் பரவசத்தோடு அணுகுங்கள். அது உங்களை ஆர்வத்தோடு செயல்பட வைக்கும்”(இளைஞர்களுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்பிச்சை).

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.