2016-01-13 15:17:00

அமைதி ஆர்வலர்கள்:2005ல் நொபெல் அமைதி விருது பாகம் 1


சன.13,2016. புதிய ஆங்கில ஆண்டு தொடங்கிய அடுத்த நாளே சவுதி அரேபியாவில் பிரபலமான ஷியா இஸ்லாம் பிரிவு மத குரு உட்பட 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே பதட்ட நிலைகள் உருவாகியுள்ளன. அடுத்து, “அணுகுண்டைவிட அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடி குண்டை வெற்றிகரமாக சோதித்து பார்த்துவிட்டோம்” என்று சனவரி 6ம் தேதி வட கொரிய கம்யூனிச அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட தளம் ஒன்றுக்கு அருகில் 5.1 என்ற அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் அரசு இந்த அறிவிப்பை, அரச தொலைக்காட்சியில் வெளியிட்டது. ஏற்கெனவே அணு ஆயுதங்களை மூன்று முறை பரிசோதித்துவிட்ட வடகொரியா, அணுகுண்டைவிட பன்மடங்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அதிபயங்கரமான ஹைட்ரஜன் வெடிகுண்டை சோதித்து பார்த்துள்ளது. அணுவைப் பிளப்பதால் வெளிவரும் ஆற்றல் நிகழ்வே அணுகுண்டு வெடிப்பு. ஆனால், ஹைட்ரஜன் குண்டு வெடிப்போ அணு இணைப்பு நிகழ்வாகும். அப்போது சுட்டெரிக்கும் வெப்பமும் சக்தியும் வெளிப்படுகின்றன. இது, ஒரு வெடிப்பு நிகழ்விலேயே ஒட்டுமொத்த நகரத்தையும் அழிக்கும் ஆற்றல் படைத்தது. மேலும், ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை மிகச் சிறிய அளவில் தயாரிப்பதும் எளிது. இதனால் இவற்றை ஏவுகணைகள் மூலம் எளிதாக எடுத்துச் சென்று எதிரி நாடுகள் மீது வீசவும் முடியும்.

இன்றைய உலகில், அணு ஆயுதப் பரிசோதனைகளும், ஆயுத வர்த்தகமும் உலகளாவிய அமைதிக்கு, தொடர்ந்து அச்சுறுத்தலையும் முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. 2015ம் ஆண்டில் உலக அளவில் அணு ஆயுதங்களின் நிலவரம் குறித்து வெளியான தகவலின்படி, உலகில் ஏறக்குறைய பதினாறாயிரம் அணு ஆயுதங்கள் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 90 விழுக்காட்டுக்கு மேல் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், இரஷ்யாவிலும் இருக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய .ஐந்தும் அணு ஆயுத நாடுகள் எனப்படுகின்றன. இவற்றில், பிரிட்டனில் 225, பிரான்சில் 300, சீனாவில் 260 என அணு ஆயுதங்கள் உள்ளன. 1970ம் ஆண்டில் அமலுக்கு வந்த, அணு ஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா ஆகிய மூன்று நாடுகள் அணுப் பரிசோதனைகளை நடத்தியுள்ளன. இந்தியாவில் 90 முதல் 110 வரையிலும், பாகிஸ்தானில் 100 முதல் 120 வரையிலும், இஸ்ரேலில் 80 என அணு ஆயுதங்கள் இருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் அழிவு மற்றும், இன்றும் அதன் பின்விளைவுகளைக் காணும் ஆர்வலர்கள், உலகில் அணு ஆயுதங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தும், அதற்காக முயற்சிகள் எடுத்தும் வருகின்றனர். இத்தகைய ஆரவலர்களில் ஒருவருக்கும், அவர் தலைமை வகித்த நிறுவனத்திற்கும் 2005ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. IAEA என்ற அனைத்துலக அணுசக்தி நிறுவனமும், அந்நிறுவனப் பொது இயக்குனராகப் பணியாற்றிய Mohamed Mustafa ElBaradei அவர்களும் இந்த விருதைப் பகிர்ந்து கொண்டனர். 

உலகில் அணுசக்தி, இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், அணுசக்தி அமைதியான நோக்கங்களுக்காக, இயலக்கூடிய வழியில் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், முகமது எல்பராதெய் அவர்களும் IAEA நிறுவனமும் எடுத்த முயற்சிகளுக்காக இவ்விருது வழங்கப்படுவதாக 2005ம் ஆண்டில் நார்வே நொபெல் விருதுக் குழு அறிவித்தது. 1896ம் ஆண்டில், ஆல்பிரட் நொபெல் அவர்கள் இறந்த டிசம்பர் 10ம் தேதியன்று ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்லோவில் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது வழங்கப்பட்ட 2005ம் ஆண்டிலும் உலகில் அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டு வந்தது. அதோடு, அணு ஆயுதங்கள், நாடுகளுக்கும், பயங்கரவாதக் குழுக்களுக்கும் பரவிவந்த ஆபத்து இருந்ததால் அப்போதைய ஆயுதக்களைவு முயற்சிகளும் செயலிழந்தன. இதனால் அணு ஆயுதப் பரவலையும், அணுசக்தி பயன்பாட்டையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த IAEA நிறுவனம் மற்றும், அதன் பொது இயக்குனராகப் பணியாற்றியவரின் பணி, விலைமதிப்பற்ற முக்கியத்துவம் நிறைந்ததாய்த் தோன்றியது.

"அமைதிக்காக அணுக்கள் (Atoms for Peace)" என்று பரவலாக அறியப்படும் IAEA நிறுவனம், ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்குள் இயங்கும் ஓர் அமைப்பாகும். 1953ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் Dwight D. Eisenhower அவர்கள் ஐ.நா. பொது அவையில், அமைதிக்காக அணுக்கள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் விளைவாக, IAEA அனைத்துலக அணுசக்தி நிறுவனம் உருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் பிறந்தது. 1956ம் ஆண்டு அக்டோபரில், இந்தியா, இலங்கை உட்பட 81 நாடுகள் ஒரே மனதாக இதற்கு இசைவு தெரிவித்தன. எனவே 1957ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி ஆஸ்ட்ரியத் தலைநகர் வியன்னாவில் இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அணு உலகில் ஐ.நா.வின் உறுப்பு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தும் மையமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு, கானடாவின் டொரென்ட்டோவிலும், ஜப்பானின் டோக்கியோவிலும் பாதுகாப்பு கிளை அலுவலகங்கள் உள்ளன. அணு தொழில்நுட்பங்கள், பாதுகாப்பாக, மற்றும் அமைதிக்காகப் பயன்படுத்தப்படுவதை உலக அளவில் ஊக்குவிப்பதற்காக ஐ.நா. உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து இந்நிறுவனம் பணியாற்றுகின்றது. அறிவியல், தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் பிற அலுவலகர்கள் என, ஏறக்குறைய 2,500 பேர் IAEA நிறுவனத்தில் உலக அளவில் பணியாற்றுகின்றனர் மற்றும் ஆதரவளார்களாகவும் உள்ளனர். இந்நிறுவனம் உலகில் அணுஆயுதங்களை ஒழிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறது.  2015ம் ஆண்டு நவம்பர் நிலவரப்படி இதில் 167 நாடுகள் உறுப்புக்களாக அங்கம் வகிக்கின்றன. மேலும், 1974ம் ஆண்டில் இதில் இணைந்த வட கொரியா, 1994ம் ஆண்டில் இதிலிருந்து விலகிக் கொண்டது. ஐ.நா. பொது அவை மற்றும் பாதுகாப்பு அவைகளுக்கு இந்நிறுவனம் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும். இதன் தற்போதைய தலைவர் ஜப்பான் நாட்டு Yukiya Amanoஆவார்.

IAEA நிறுவனத்தின் முப்பெரும் தூண்கள் என்று போற்றப்படும் முதன்மை கடமைகள் மூன்று. பன்னாட்டு ஒப்பந்தத்தின்படி, நாடுகளின் அணு மற்றும் அணு சார்ந்த நிலையங்களில் சோதனை மேற்கொள்கிறது. உலக நாடுகளின் அணு கட்டுமானம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் காவலை மேம்படுத்தவும், இடர் வருங்கால் சரியான முறையில் எதிர்கொள்ளவும் உதவுகிறது. கேடு விளைவிக்கும் அணுக்கதிர் வீச்சிலிருந்து மக்களையும் சுற்றுச்சூழலையும் காப்பது இதன் முக்கிய குறிக்கோளாகும். வளரும் நாடுகளின் இன்றியமையாத் தேவைகளுக்கு அமைதிவழியில் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு உலகின் முன்னோடியாக இது திகழ்கிறது. இப்பணியானது வறுமை, நோய்கள், சுற்றுச்சூழல்கேடு போன்றவற்றை எதிர்த்துப் போரிடவும் நிலையான வளர்ச்சியை பெருக்கவும் பங்களிக்கிறது 

அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னார் - அணுகுண்டுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைத்து அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அவர்களுக்கு நான் கடிதம் எழுதிய போது நான் வாழ்வில் பெரிய தவறைச் செய்தேன். மூன்றாம் உலகப்போர் எதை வைத்து போரிடப்படும் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் நான்காம் உலகப் போர் குச்சிகள் மற்றும் கற்களை வைத்து நடத்தப்படும் என்று. அன்பர்களே, அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகம் உருவாக வேண்டும் என்ற நம் கனவு என்று மெய்ப்படும்? 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.