2016-01-15 15:23:00

திருத்தந்தை : எவருமே விசுவாசத்தை விலைக்கு வாங்க முடியாது


சன.15,2016. இயேசுவை நாம் உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டுமெனில், நாம் மூடிய இதயங்களைக் கொண்டிருக்கக் கூடாது, மாறாக, மன்னிப்பு மற்றும் தாழ்மைப் பண்புகளின் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமை திருப்பலி மறையுரையில் கூறினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை ஆற்றியத் திருப்பலியில், முடக்குவாதமுற்ற ஒருவருக்கு, கப்பர்நாகுமில், இயேசு குணமளித்த புதுமையை விளக்கும் மாற்கு நற்செய்தி (மாற்.2:1-12) பகுதியிலிருந்து மறையுரைச் சிந்தனைகளை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசம் எப்படிப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இயேசு கிறிஸ்து, இறைவன் என்றும், இறைவனின் மகன் என்றும் விசுவசித்தால், அந்த விசுவாசம் நம் வாழ்வை மாற்றுகின்றது என்றும், எவருமே விசுவாசத்தை விலைக்கு வாங்க இயலாது, இது நம் வாழ்வை மாற்றுகின்ற ஒரு கொடை என்றும் கூறிய திருத்தந்தை, நம் விசுவாசத்தின் அளவுகோல் இறைவனைப் புகழ்வதாகும் என்றும் கூறினார்.

நாம் இறைவனைப் புகழ்வதற்கு எவ்வளவு சக்தி கொண்டுள்ளோம் என்பதிலிருந்து நம் விசுவாசம் பரிசோதிப்படுகின்றது என்றும், இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இறைவனைப் புகழ்வதற்கு நம்மை இட்டுச்செல்லும் விசுவாசத்தைப் பெறுவதற்கு வரம் கேட்போம் என்றும் தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

நாம் மூடிய இதயங்களைக் கொண்டிருந்தால் இயேசுவைப் புரிந்துகொள்ள முடியாது என்றும், இயேசு தமது இறையாட்சிப் பணியின் தொடக்கத்தில் நாசரேத் தொழுகைக் கூடத்தில் வாசித்ததைவிட, முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கிய நிகழ்வில் ஒருபடி மேலே சென்று, அந்நோயாளியைக் குணமாக்கியதோடு, அவரின் பாவங்களையும் மன்னித்தார் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இயேசுவில் நாம் கொண்டிருக்கும் விசுவாசம், உண்மையிலேயே நம் வாழ்வை மாற்றுகின்றதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வோம் என்று  மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

மேலும், “தனிமை மற்றும் புறக்கணிப்புப் பாலைநிலத்தின் மத்தியில், ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும், பிறரன்பு மற்றும் கனிவின் பாலைவனச் சோலையாக இருக்க வேண்டும்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வெள்ளியன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.