2016-01-16 14:50:00

பொதுக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற சொற்களுடன் ஆரம்பமாகும் திரைப்படப் பாடலைக் கேட்டிருக்கிறோம். தை பிறந்துவிட்டது; வழி பிறக்கும் என்று நம்புகிறோம். ‘வழி பிறக்கும்’ என்பதில்தான் எத்தனை, எத்தனை கனவுகள்? குழந்தை பிறப்பு, கல்வியில் வெற்றி, நல்ல வேலை, திருமணம், வீடுகட்டுதல் என்ற பல கனவுகள், 'வழி பிறக்கும்' என்ற வார்த்தைகளுக்குப்பின் அணிவகுத்து நிற்கின்றன.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற வார்த்தைகளை வைத்து இணையதளத்தில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர், இந்தப் பாடல் வரியை, "தை பிறந்தால், வலி பிறக்கும்" என்று பதிவு செய்திருந்தார். இன்னொருவர் அதற்கு, "நண்பா, அது வலி அல்ல, வழி" என்று பதில் எழுதி இருந்தார்.

தமிழில், வலி, வளி, வழி என்று மூன்று வார்த்தைகள் உள்ளன. வலி = துன்பம், வளி = காற்று, வழி = பாதை. தை பிறந்தால், பாதை பிறக்கும் என்பதைத்தான் இந்தப் பாடல் வரி சொல்கிறது. ஆனால், அந்த வழி பிறக்க, வலிகளைத் தாங்க வேண்டும். வீசுகின்ற வளியை, சூறாவளியைச் சமாளிக்கவேண்டும். வலியும், வளியும் இல்லாமல், எளிதாக வழி பிறக்காது.

அவ்விதம் வலிகளைத் தாங்கி, சுழன்று வீசும் வளிகளைச் சமாளித்து நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி, நமது இல்லங்களில் நடைபெறும் திருமணங்கள். நாம் துவக்கத்தில் பட்டியலிட்ட கனவுகளிலேயே மிகக் கடினமானக் கனவுகள் என்று நமது பழமொழிகள் உணர்த்தும் இரு கனவுகள்: "கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்."

தை மாதத்தில், பல குடும்பங்களில், திருமணங்கள் நடைபெறும். இச்சூழலில், இஞ்ஞாயிறன்று இயேசுவும், அன்னை மரியாவும் கலந்துகொண்ட ஒரு திருமணத்தைப் பற்றி சிந்திக்க, திருஅவை நம்மை அழைக்கிறது. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் நம் கவனத்தைக் கட்டிப்போடுகின்றன: (யோவான் 2: 1-3)

கானாவில் திருமணம். இயேசுவின் தாய் அங்கு இருந்தார்; இயேசுவும், சீடர்களும் அழைப்பு பெற்றிருந்தனர்; இரசம் தீர்ந்துவிட்டது… என்பன, நாம் வாசித்த நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள். இயேசுவின் தாய் அங்கு ‘இருந்தார்’ என்று சொல்லும்போது, திருமணத்திற்கு முன்பே அவர் அங்கு சென்றிருக்கக்கூடும் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம்.

ஒரு குடும்பத்தில் திருமணம் என்றால், மிக மிக நெருங்கியவர்கள் ஒரு சில நாட்களுக்கு முன்னரே அங்கு சென்று, திருமண ஏற்பாடுகளில் கலந்து கொள்வார்கள், இல்லையா? ஊரில் திருமணம் என்றால், சில தாராள மனம் கொண்ட நல்ல உள்ளங்கள், சொந்தம், சொந்தமில்லை என்பதையோ, அழைப்பு வந்தது, வரவில்லை என்பதையோ, கொஞ்சமும் சிந்திக்காமல், அந்த வீடுகளுக்கு உரிமையுடன் சென்று, வேலைகளை இழுத்து போட்டுக்கொண்டு செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவர்களில் பலர், திருமணங்கள் முடிந்ததும், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதையும் பார்த்திருக்கிறோம். ஒரு நல்ல காரியம், மிக நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன், வேறு எந்த உள்நோக்கமும் இல்லாமல் செயல்படும் இந்த அன்பு உள்ளங்கள், உலகின் பல சிற்றூர்களில் இன்றும் நடமாடுகிறார்கள்.

நடமாடும் இத்தகையப் புதுமைகளின் முன்னோடியாக, நம் அன்னை மரியா கானா திருமண வீட்டில் ‘இருந்தார்’. அன்னை மரியாவின் அழகே இதுதான். எங்கெல்லாம் அவரது உதவி தேவை என்று உணர்கிறாரோ, அங்கெல்லாம், எவ்வித அழைப்பும் இல்லாமல் சென்று உதவுவார். தன் உறவினரான எலிசபெத்தைப் பற்றி வானதூதர் சொன்னதும், மரியா கிளம்பிச் சென்றது நமக்கு நினைவிருக்கும்.

கானாவிலும் திருமணத்திற்கு முன்னரே அந்த வீட்டுக்குச் சென்று அவர்களது பல தேவைகளை நிறைவு செய்தார் மரியா. கல்யாண நாளன்றும், இந்த அன்புத் தாயின் உள்ளமும், கண்களும் யார் யாருக்கு என்னென்ன தேவை என்பதைத் தேடிக் கொண்டிருந்தன. எனவேதான், குறைந்து வரும் திராட்சை இரசம், அவரது கண்களில் முதலில் பட்டது.

குறையில்லாதத் திருமணங்கள் உலகத்தில் எங்கும் இல்லை. திருமண வைபவங்களில் குறைகள் ஏற்படும்போது, அவற்றைப் பகிரங்கப்படுத்தி, பெரிதாக்கி, வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. 'காதும் காதும் வைத்ததுபோல்' பிரச்சனைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. மரியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். குறையைக் கண்டதும், அதைத் தீர்க்க நினைக்கிறார். தன் மகனிடம் கூறுகிறார்.

அன்னை மரியாவுக்கும், இயேசுவுக்கும் நிகழ்ந்த உரையாடலில் நாம் பல்வேறு அடுக்கடுக்கான அர்த்தங்களைக் காண முடியும். இன்று, அந்த உரையாடலைத் தொடர்ந்து, அங்கு நிகழ்ந்தவற்றை சிறிது ஆழமாகச் சிந்திப்போம். அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் யோவான் இவ்விதம் சித்திரிக்கிறார்:

யோவான் நற்செய்தி, 2: 5-9,11

இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு, பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது... இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம்.

பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்த புதுமை நடந்தது?

வழக்கமாக, இயேசுவின் புதுமைகளில் அவர் சொல்லும் ஒரு சொல்லோ, அல்லது அவரது ஒரு செயலோ புதுமைகளை நிகழ்த்தும். ஆனால், இந்தப் புதுமை நடந்தபோது, அப்படி தனிப்பட்ட வகையில் இயேசு எதையும் சொல்லவில்லை; செய்யவுமில்லை.

"தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்" என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது அவர் கைகளை நீட்டியதாகவோ, எதுவும் சொன்னதாகவோ நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை.  

ஆனால், இயேசுவின் இந்த இரு கூற்றுகளுக்குமிடையே, யோவான் ஓர் அழகிய வாக்கியத்தை இணைத்துள்ளார். 'தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதும், அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள். இதுதான் அந்தப் புதுமை நிகழ்ந்ததைக் கூறும் பொருள்நிறைந்த வாக்கியம். என்னைப் பொருத்தவரை, எப்போது அப்பணியாளர்கள், தொட்டிகளில், விளிம்புவரை நீர் நிரப்பினார்களோ, அப்போது, அந்தத் தண்ணீர், திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்தது. அவர்கள் நீர் நிரப்பியதில் அப்படி என்ன அற்புதம் புதைந்துள்ளது என்ற கேள்வி எழுவது இயற்கை. இதற்குப் பதில் சொல்ல, அங்கு நடந்ததை, சிறிது கற்பனை கலந்து சிந்திக்க வேண்டியுள்ளது.

மரியா, பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். பணியாளர்களுக்குக் குழப்பம். மரியன்னை 'அவர்' என்று குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் புது மனிதரை அவர்கள் அதுவரைப் பார்த்ததில்லை. அந்த இளைஞனைப் பார்த்தால், பிரச்சனையைத் தீர்த்து வைப்பவர்போல் அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களாய் தங்களுடன் சேர்ந்து அதிகம் வேலைகள் செய்து, தங்கள் பிரச்சனைகள் பலவற்றை தீர்த்தவர், மரியன்னை என்பதால், அவர் மட்டில் அதிக மதிப்பு அவர்களுக்கு இருந்தது. அந்த அன்னை சொன்னால், அதில் ஏதாவதொரு அர்த்தம் இருக்கும் என்று அவர்கள் நம்பினர். மேலும், அந்த இளைஞன் அந்த அம்மாவுடைய மகன் என்றும் கேள்விப்பட்டதால், அவர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்கள் மனம் ஓரளவு தயாராக இருந்தது.

அவர்கள் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இயேசு, தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர்கள் நின்றுகொண்டிருந்த முற்றத்தில், கை, கால் கழுவுவதற்கென, நீர் தொட்டிகள் இருந்தன. இயேசு, பணியாளரிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். இக்காட்சியை நாம் வாழும் காலத்திற்கு ஏற்றதுபோல் சொல்லவேண்டுமெனில், ஒரு கிராமத்தில் நடக்கும் திருமண வைபவத்தைக் கற்பனை செய்து கொள்வோம். கை, கால் கழுவ குழாய் வசதி இல்லாத இடங்களில், பெரிய பாத்திரங்களில், அல்லது பிளாஸ்டிக் வாளிகளில் வெளியே தண்ணீர் வைத்திருப்போம். ஒரு சில இடங்களில் சிமென்ட் தொட்டிகளிலும் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரை எடுத்து யாரும் குடிப்பதில்லை, இல்லையா? அந்தப் பாத்திரங்களில், அல்லது தொட்டிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார் இயேசு.

இயேசு இவ்வாறு சொன்னதும், பணியாளர்களுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, கொஞ்சம் எரிச்சலும் இருந்திருக்கும். பந்தியில் பரிமாற திராட்சை இரசம் இல்லையென்று அலைமோதிக் கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு கட்டளையை இயேசு தருவார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்நேரத்தில் மரியன்னையைப் பற்றி நினைத்துப் பார்த்திருப்பார்கள். "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று அந்த அம்மா சொன்னச் சொற்கள் அவர்கள் உள்ளத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தன.

இயேசு சொன்னதைக் கேட்டு குழப்பம், கோபம், இவற்றையே மனதில் தாங்கி, அந்தப் பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், அத்தொட்டிகளை அரைகுறையாய் நிரப்பியிருப்பர்.  ஆனால், யோவான் தெளிவாகக் கூறியுள்ளார்: அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று. அப்படியென்றால், அந்தப் பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது. இந்த உள்ள மாற்றம்தான், தண்ணீர் இரசமாக மாறிய அந்தப் புதுமையைத் துவக்கிவைத்தது. தங்கள் அதிர்ச்சி, தயக்கம், எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டச் செயலை முழுமையாகச் செய்த அந்நேரத்திலேயே, அவர்கள் ஊற்றிய தண்ணீர் திராட்சை இரசமாக மாறியது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு வாழ்வில் மாற்றங்கள் பலவற்றையும் உருவாக்கும்.

இறுதியாக ஒரு சிந்தனை. புதுமையாய்த் தோன்றிய இந்த இரசம் எங்கிருந்து வந்ததென பந்தி மேற்பார்வையாளனுக்குத் தெரியவில்லை. மணமகனைக் கூப்பிட்டு கேட்கிறார். அவருக்கும் தெரியவில்லை. ஆனால், பணியாளருக்குத் தெரிந்திருந்தது. “பணியாளருக்குத் தெரிந்திருந்தது” என்று யோவான் கூறும் கூற்றில், மையங்கள் ஓரமாவதையும், ஓரங்கள் மையமாவதையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.

திருமண வைபவங்களில் பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், எல்லாப்பொருட்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை.  மணமகன், மணமகள் இவர்கள் அமரும் நாற்காலிகள் புகழ் பெறலாம், எல்லா புகைப்படங்களிலும் இடம் பெறலாம். கை, கால்களைக் கழுவும் தொட்டிகள், புகைப் படங்களில் இடம் பெறுவதில்லை. அதே போல், இந்த வைபவங்களில் முழு நேரமும் கடினமாக உழைக்கும் பணியாளர்களைப் பற்றி யாரும் பெரிதாக நினைப்பதில்லை. திருமணப் புகைப்படங்கள் அடங்கிய எந்த ஒரு ஆல்பத்தையும் திறந்து பாருங்கள். அங்கு பணியாளர்களின் படங்கள் எல்லாமே, ஏதாவதொரு பணியை அவர்கள் செய்வதுபோல் பின்னணியில் இருக்குமே ஒழிய, அவர்களை மையப்படுத்தி இருக்காது. இயேசுவின் இந்தப் புதுமை வழியாக, அந்தத் திருமணத்தில் மையமான புள்ளிகள் எல்லாமே மறைந்து விட்டனர். ஓரத்தில் இருந்த பணியாளர்கள் இயேசுவுடன் சேர்ந்து, புதுமையின் நாயகர்களாயினர். யாருடைய கவனத்தையும் ஈர்க்காத நீர்த்தொட்டிகள் இறைமகனுடைய கவனத்தை ஈர்த்தன. அவரது புதுமைக்கு மையமாயின.

நம் வாழ்விலும், எதை எதை மையப்படுத்துகிறோம். அல்லது ஓரத்தில் ஒதுக்கி வைக்கிறோம் என்பதையெல்லாம் புத்தாண்டின் துவக்கத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. மையங்களும், ஓரங்களும் மாறவேண்டுமெனில், துணிவுடன், முழு மனதுடன் மாற்றங்களைச் செய்யவேண்டும். அதற்கு, இறைவனின் துணையை நாடுவோம். சிறப்பாக, நாம் கொண்டாடிவரும் இரக்கத்தின் யூபிலி ஆண்டில், ஓரங்களில், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் வாழும் மக்களை நம் வாழ்வின் மையங்களாக்கி அவர்களுக்குத் தேவையான கவனத்தைத் தரும் மனதை நமக்கு இறைவன் தரவேண்டுமென்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.