2016-01-18 16:02:00

கானாவூரில் இயேசு, மனித குலத்தின் மீட்பராக வெளிப்படுகிறார்


கானாவூர் திருமணத்தில் இயேசு, மனித குலத்தின் மீட்பராக வெளிப்படுகிறார்

 

சன.18,2016. இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரையில், கானாவில் திருமண நிகழ்வில், இயேசு நிகழ்த்திய புதுமை பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

அந்தப் புதுமையில் இயேசு, மணவாளன்மீது பரிவு காட்டுகிறார், அவர்களின் திருமணத்தில் இறையாசீரைப் பொழிகிறார் என்றுரைத்த திருத்தந்தை, ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே நிலவும் அன்பு, நற்செய்தியை வாழ்வதற்கு ஒரு நல்ல வழி, இதன் வழியாக, தூய வாழ்வை நோக்கிய பாதையை மகிழ்வோடு தேர்ந்தெடுக்க  முடிகின்றது என்றும் கூறினார்.

கானாவில் நடந்த புதுமை, அத்திருமணத் தம்பதியரை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்வில் இயேசுவைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது என்றும், நம் விசுவாசம், இன்பம் துன்பம், ஒளி இருள் என மாறுபட்ட நேரங்களைச் சந்திக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு அத்திருமண நிகழ்வில், நம் தவறுகளைக் கண்டிக்கும் நீதிபதியாக அல்லது அவரின் கட்டளைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதற்கு வற்புறுத்துபவராக இருக்கவில்லை, ஆனால், இயேசு தம்மை மனித சமுதாயத்தின் மீட்பராகவும், நம் மூத்த சகோதரராகவும், நம் இதயத்தில் பொதிந்துள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் வாக்குறுதிகளுக்குப் பதிலளிக்கும் இறைமகனாகவும் இருந்தார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை இவ்வாறு நாம் அறிந்துகொள்கிறோமா என்ற கேள்வியையும் விசுவாசிகளிடம் முன்வைத்த திருத்தந்தை, நம் இதயங்களில் அவருக்கென இடம் ஒதுக்குமாறு இயேசு கேட்கிறார் என்றும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.