2016-01-20 15:51:00

கல்வி புகட்டுவது, பெரிய இரக்கச் செயல் - பாகிஸ்தான் ஆயர்


சன.20,2016. ஒரு குழந்தைக்கோ, கல்வியறிவற்ற ஒருவருக்கோ, சரியான கல்வி புகட்டுவது, மிகப் பெரிய இரக்கச் செயல் என்று, பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.

நடைபெறும் இரக்கத்தின் யூபிலி ஆண்டில், பாகிஸ்தானின் ­ஃபைசலாபாத் மறைமாவட்டம், கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க தீர்மானித்திருப்பதை, ஃபிதேஸ் (Fides) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த ஆயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், இந்த கல்வி முயற்சி, பிப்ரவரி 6ம் தேதி துவங்கும் என்று அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நிலவும் வன்முறைகளைக் குணமாக்க, இரக்கத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய கடமை, கல்வியே என்றும், இந்த முயற்சி, பாகிஸ்தான் தலத்திருஅவை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைக் கொண்டாடும் நாளான, பிப்ரவரி 6ம் தேதி துவங்கும் என்றும், ஆயர் அர்ஷத் அவர்கள் அறிவித்தார்.

சரியான, உயர் தரமான கல்வி வழங்கப்பட்டால், அது சீரிய சமுதாய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறிய ஆயர் அர்ஷத் அவர்கள், இந்த முயற்சியில், தலத்திருஅவையின் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், குடும்பங்களும் இணைந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.