2016-01-20 16:04:00

சமுதாயத்தின் விளிம்பு நோக்கி செல்லவேண்டிய துறவியர்


சன.20,2016. துறவற வாழ்வுக்கு அர்ப்பணிக்கப்பட்டோர், தங்கள் சுகமான கூடுகளை விட்டு வெளியேறி, சமுதாயத்தின் விளிம்புகளை நோக்கிச் செல்லவேண்டும் என்று திருத்தந்தை விடுத்த அழைப்பு, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் சிறப்பான சிகரம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

2014ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி துவங்கி, இவ்வாண்டு பிப்ரவரி 2ம் தேதி நிறைவடையும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டைக் குறித்து, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு திருப்பேராயத்தின் செயலர், பேராயர் José Rodríguez Carballo அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, பல்வேறு நிகழ்வுகளாலும், கொண்டாட்டங்களாலும் நிறைந்த ஒரு காலமாக மட்டும் இல்லாமல், நற்செய்தி வழியில் துறவு வாழ்வில் மறுமலர்ச்சி பெறுவதற்கு ஒரு தருணமாக அமைந்தது என்று பேராயர் கார்பெல்லோ அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

சிரியா, லிபியா, புனித பூமி, ஈராக், ஈரான், மியான்மார், ஹெயிட்டி இன்னும் பல நாடுகளில், மிகக் கடினமானச் சூழல்களில் தங்கள் அர்ப்பண வாழ்வைத் தொடரும் துறவிகளை இந்தச் சிறப்பு ஆண்டில் சந்திக்க முடிந்ததை, தன் பேட்டியில் நினைவுகூர்ந்த பேராயர் கார்பெல்லோ அவர்கள், இத்துறவிகள், அர்ப்பண வாழ்வுக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டுகள் என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.