2016-01-23 15:12:00

ஆசியாவில் மதம் மடிந்துகொண்டிருக்கவில்லை


சன.23,2016. ஆசியாவில், விளையாட்டு அல்லது மற்ற கேளிக்கை நிகழ்வுகளுக்குச் செல்லும் மக்கள் கூட்டத்தைவிட, செபக் கூட்டங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம், இச்செபக் கூட்டங்களில் ஏழைகளும், பணக்காரரும் வேறுபாடின்றி இருக்கின்றனர் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் செபுவில் இஞ்ஞாயிறன்று தொடங்கவிருக்கும் 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு பற்றி ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய, Guwahati பேராயரும், Jowai அப்போஸ்தலிக்க நிர்வாகியுமாகிய பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஆசியாவில் மதம் மடிந்துகொண்டிருக்கின்றது என்று தொடர்ந்து கூறிவரும் தீவிர நாத்திகர்களுக்கு, செபக்கூட்டங்களில் பெருமளவாகக் கலந்துகொள்ளும் மக்களே சிறந்த பதில் என்று கூறினார் பேராயர் மெனாம்பரம்பில்.

ஆசிய கத்தோலிக்கத் திருஅவைக்கு, திருநற்கருணை மாநாடு எவ்வளவு மதிப்புமிக்கதாய் உள்ளது என்பது பற்றியும், இக்காலத்தில் மக்கள், நற்செய்திக்கு எவ்வாறு சான்று பகர இயலும் என்பது பற்றியும் கருத்து தெரிவித்த பேராயர் மெனாம்பரம்பில் அவர்கள், மதங்களில், அமைதியான வழிபாடுகளையே ஆசியர்கள் மிகவும் வரவேற்கின்றனர், இவ்வகையில் திருநற்கருணை ஆராதணை ஆசியர்களுக்கு இறைப்பேருண்மையை வெளிப்படுத்துவதாய் உள்ளது என்று கூறினார்.

இயேசுவுக்கு மரணம் நெருங்கி வந்தபோது, கைவிடப்பட்டவராக அவர் உணர்ந்தார், இயேசுவின் இம்மனநிலையில் நாம் நுழைய முடிந்தால், ஆசியாவில் நற்செய்திக்குச் சிறப்பாகச் சாட்சி சொல்ல முடியும் என்று கூறினார் பேராயர் மெனாம்பரம்பில்.

பேராயர் மெனாம்பரம்பில் அவர்கள், சண்டையிட்டுவந்த பல்வேறு இனக் குழுக்களிடையே இடைநிலையாளராகச் செயல்பட்டவர்.

51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு, சனவரி 24 முதல் 31 வரை செபு நகரில் நடைபெறும்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.