2016-01-26 16:03:00

தமிழகத்தில், 47 விழுக்காட்டினருக்கு மது பழக்கம்


சன.26,2016. தமிழகத்தில், 47 விழுக்காட்டினர் மது பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதாக, மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து, தாய்ப்பால், உடல் பருமன் குறித்து, மத்திய அரசு ஆய்வு செய்து, 'தேசிய குடும்ப நலவாழ்வு ஆய்வு - 4' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு தீர்வு காண, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில், 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலைமை மேம்பட்டு இருந்தாலும், உள்ளூரில் கிடைக்கும் சிறு தானியம், மற்றும், இயற்கை உணவுகள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லையென்பதால், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வந்த ஆண்களில், 14 விழுக்காட்டினருக்கும், பெண்களில், 10 விழுக்காட்டினருக்கும் உடல் பருமன் அதிகரித்துள்ள நிலையில், உடல் பருமனை குறைக்கவும், மன நல மேம்பாட்டிற்கும், சிறப்பு திட்டங்கள் உருவாக்க வேண்டும்  எனவும், தமிழக அரசை விண்ணப்பித்துள்ளது மத்திய அரசின் இந்த அறிக்கை.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.