2016-01-27 15:48:00

சிரியா அமைதிப் பேச்சுவார்த்தைகள் கிறிஸ்தவர்களை மறக்கக்கூடாது


சன.27,2016. சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு அரசியல்  தீர்வு கண்டு, அப்போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் ஐ.நா. தலைமையில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில், அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் பேராயர் சில்வானோ தொமாசி.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இப்பேச்சுவார்த்தையில், கிறிஸ்தவர்கள், யஜிதிகள் மற்றும் பெரும்பான்மை முஸ்லிம் சமூகத்தைச் சாராதவர்கள் ஆகியோர் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று உரைத்த பேராயர் தொமாசி அவர்கள், நிலையான போர் நிறுத்தம் இடம்பெறும், அதன்வழியாக, சிரியாவில் சமூக மற்றும் பொருளாதார வாழ்வு கட்டியமைக்கப்படும் என்றும் கூறினார்.

சனவரி 29, வருகிற வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஆறுமாதம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இப்பேச்சுவார்த்தைகளில், நீண்ட கால இடைக்காலப் போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதற்கு வழியமைத்தல், ஐ.எஸ். இஸ்லாமிய அரசு முன்வைக்கும் அச்சுறுத்தலை நிறுத்துவது போன்ற விவகாரங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐந்து ஆண்டுகளாக நடந்து வரும் சண்டையில், இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் மற்றும் நாற்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.