2016-01-28 15:09:00

அநீதிக்கு எதிராக இளைஞர்கள் போராட வேண்டும்: சகாயம் ஐ.ஏ.எஸ்


சன.28,2016. அநீதிக்கு எதிராக, சட்டத்துக்கு உட்பட்டு, இளைஞர்கள் போராட வேண்டும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறினார்.

கவிஞர் நந்தலாலா அவர்கள் தலைமையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் கூட்டம் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற வேளையில், சிறப்பு விருந்தினராக, அக்கூட்டத்தில் பங்கேற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இந்தியாவில் கிராமங்கள் வெறிச்சோடிக் கொண்டிருக்கின்றன. 1997ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை 1.66 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை வருத்தத்துக்குரியது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக நான் பணியாற்றியபோது, நெசவாளர்களின் வேதனையை நன்கு உணர முடிந்தது. 6 மீட்டர் நீளமுள்ள சேலையை உற்பத்தி செய்ய, ஒரு நெசவாளி 19,500 முறை கையையும், காலையும் அசைக்க வேண்டியுள்ளது. இதற்காக அவருக்கு கிடைப்பது ரூ.70 மட்டுமே என்று, சகாயம் அவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

நாட்டின் முன்னேற்றத்தை, டெல்லி, மும்பை ஆகிய பெருநகரங்களிலிருந்து பார்க்கக்கூடாது. விவசாயிகள், நெசவாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான், நாடு முன்னேறியதாக கருதவேண்டும் என்று தெளிவுபடுத்திய சகாயம் அவர்கள், நகரின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கியுள்ள கிராமங்களைத் தத்தெடுத்து, அவற்றின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

23 ஆண்டுகளுக்கு முன் நான் பணியைத் தொடங்கியபோது, “நேர்மையாக இருப்பவர்கள் பைத்தியக்காரர்கள்” என்று என்னிடம் கூறினார்கள். நான் பைத்தியக்காரனாகவே இருக்க ஆசைப்பட்டேன். காரணம், இவ்வுலகின் வரலாறு, பல பைத்தியக்காரர்களால்தான் எழுதப்பட்டது என்று, சகாயம் அவர்கள் தன் வாழ்வு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இளைஞர்கள் அநீதிக்கு எதிராக, சட்டத்துக்கு உட்பட்டு போராட வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அநீதியை எதிர்க்க வேண்டும். இளைஞர்கள்தான் மாற்றங்களுக்கு வித்திடக்கூடியவர்கள். தமிழக இளைஞர்களின் சிந்தனையில் தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் எங்கிருந்தாலும் அதற்கு எதிராக செயல்படுங்கள் என்று சகாயம் அவர்கள் இளையோரிடம் விண்ணப்பித்தார்.

பணம் ஏதும் வாங்காமல், நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்யக்கூடிய அளவுக்கு மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த, தேர்தல் அரசியலைத் தாண்டி, ஆக்கப்பூர்வமானச் செயல்பாடுகளில் இளைஞர்கள் ஈடுபடலாம் என்று சகாயம் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.