2016-01-28 16:04:00

குடும்பம் குறித்த திருத்தூது அறிவுரை மடல்,மார்ச் மாதத்தில்


சன.28,2016. குடும்பத்தை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தின் கருத்துக்களைத் தொகுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் திருத்தூது அறிவுரை மடல், இவ்வாண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருப்பீட குடும்ப அவையின் தலைவர், பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், போர்த்துகல் நாட்டின் கத்தோலிக்க நிறுவனமான எக்லேசியாவுக்கு (Ecclesia) அளித்த பேட்டியொன்றில், இத்தகவலை வெளியிட்டார் என, CNA கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தன் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு, உடைந்த குடும்பங்களுக்கு ஆறுதலும் உறுதியும் வழங்கும் ஓர் அன்புத் தந்தையின் பாசம் மிகுந்த பாடலாக, திருத்தந்தை வெளியிடும் இந்த அறிவுரை மடல் விளங்கும் என்று பேராயர் பாலியா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

"குடும்பம்: மையம் கொள்ளுதல், மறுமலர்ச்சி மற்றும் தொடர்ச்சி" என்ற மையக் கருத்துடன் போர்த்துகல் நாட்டின் தென் பகுதியில் நடைபெற்றுவரும் ஒரு வாரக் கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராயர் பாலியா அவர்கள், குடும்பங்களின் தொடர் பயணத்தில் திருஅவை எப்போதும் உடன் வரும் என்பதை, உலக ஆயர்கள் மாமன்றம் வெளிப்படுத்தியது என்று கூறினார்.

குடும்பங்களை மையப்படுத்தி, 2014, 2015 ஆகிய இரு ஆண்டுகளாக, வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் சிறப்பு, மற்றும் பொது மன்றங்களின் முடிவுகளை மனதில் கொண்டு, திருத்தந்தையின் திருத்தூது அறிவுரை மடல் அமையும் என்று பேராயர் பாலியா அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.