2016-01-29 16:01:00

தூக்கியெறியும் கலாச்சாரத்தை தூக்கியெறிய கர்தினால் அழைப்பு


சன.29,2016. திருநற்கருணை, ஒவ்வொருவரையும் வரவேற்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதாக அமைகின்றது, ஆனால், பிறரின் குறைகளையும், தோல்விகளையும் மட்டும் பார்ப்பவர்களுக்கு, இறைவனின் இரக்கம் தேவைப்படுகின்றது என்று, மணிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே அவர்கள் கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெற்றுவரும் 51வது அகில உலக திருநற்கருணை மாநாட்டில், திருநற்கருணையும், கலாச்சாரங்களின் உரையாடலும் என்ற தலைப்பில், இவ்வியாழனன்று உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள் இவ்வாறு கூறினார்.

அரசியல் தலைவர்களுக்கு ஒரு கேள்வியை முன்வைத்த கர்தினால் தாக்லே அவர்கள், மக்களின் வரிப்பணத்தை கட்சிகளின் செலவுகளுக்கும், கடைகளுக்குச் செல்வதற்கும் பயன்படுத்துகிறீர்களா அல்லது, அந்த வரிப்பணம், சமூகச் சேவைகளுக்கு வழங்கப்பட்ட கொடைகள் என, அதைப் பாதுகாக்கின்றீர்களா என்று கேட்டார்.

இக்காலத்தில் மேலோங்கி நிற்கும் தூக்கியெறியும் கலாச்சாரம் பற்றியும் குறை கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், இந்த நம் காலத்தில், சாதனைகள் மற்றும் வெற்றியின் கலாச்சாரத்தைப் பார்க்கிறோம், பொருள்களைக் குவித்து வைப்பது, தேவையற்று அவற்றை நுகர்வது ஆகியவற்றால், மனிதரின் சாதனைகள் பரவலாகக் கணிக்கப்படுகின்றன என்று கூறினார்.

சேர்த்து வைத்திருப்பவர்களே தூக்கியெறிபவர்கள், தேவைப்படாதபோதும் இவர்கள் சேர்த்து வைக்கிறார்கள் என்றுரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், கொடுக்கின்ற மற்றும் பெறுகின்ற கலாச்சாரம் தேவைப்படுகின்றது என்றும் கூறினார். 

திருநற்கருணை என்பது, நம் ஆண்டவரின் உணவு, நம் ஆண்டவர் உணவுக்கு அழைக்கும்போது, பிறரை வியப்பில் ஆழ்த்தும் நிகழ்வுகள் இடம்பெறும் என்பதை உணர்ந்து அங்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

51வது அகில  உலக திருநற்கருணை மாநாடு, வருகிற ஞாயிறன்று நிறைவடையும். 

ஆதாரம் : CBCP/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.