2016-01-29 15:39:00

மன்னிப்பு கிடைக்கும் என்பதில் ஒருபோதும் சந்தேகப்படக் கூடாது


சன.29,2016. பாவத்திற்கு நம்மை இட்டுச்செல்லும் பலவீனம், ஒருபோதும் நம்மைத் திருத்த முடியாத மனநிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது என இறைவனிடம் செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலியில், அரசர் தாவீது மற்றும் பத்சேபா கதையை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்போதும் பாவம் செய்பவர்கள், மனத்தளவில் முற்றிலுமாகக் கெட்டுப் போனவர்கள், இவ்விரு வகையான மனிதர்க்கு இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றி எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பாவம் செய்பவர்கள் போலன்றி, பாவத்திலே தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், மன்னிப்பின் அவசியத்தை உணருவதில்லை என்றுரைத்த திருத்தந்தை, ஒருவர் அடிக்கடி பாவம் செய்யலாம், ஆனால், மன்னிப்பு கிடைக்கும் என்பதில் ஒருபோதும் சந்தேகப்படாமல், இறைவனின் மன்னிப்பைக் கேட்பதற்கு எப்போதும் அவரிடம் திரும்பி வரவேண்டும் என்றும் கூறினார்.

அரசர் தாவீது, பத்சேபா என்ற பெண்ணோடு தவறாக நடந்து கொண்டதற்குப் பின்னர், பத்சேபாவின் கணவர் உரியாவை வீட்டிற்குச் சென்று மனைவியைச் சந்திக்குமாறு கூறுகிறார், ஆனால் உரியா செல்லவில்லை, இதில் தாவிதீன் திட்டமும் தோல்வியடைந்து விட்டது என்றும் கூறினார் திருத்தந்தை.

தாவீது ஒரு புனிதர், அதேநேரம் அவர் ஒரு பாவி, அவர் சிற்றின்பத்தில் விழுந்ததையும் தவிர்த்து, இறைவன் அவரை அதிகம் அன்பு கூர்ந்தார், தாவீதின் வாழ்வு நம் வாழ்வு பற்றிச் சிந்திப்பதற்கு அழைப்பு விடுக்கிறது, திருத்த முடியாத பாவ மனநிலையிலிருந்து காப்பாற்றும்படியாக, நம் தனிப்பட்ட வாழ்வு மற்றும் திருஅவையின் வாழ்வுக்காக இன்று செபிப்போம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.