2016-01-30 14:33:00

யூபிலி பொது மறைக்கல்வியுரை-இரக்கமும் மறைப்பணியும்


சன.30,2016. 2015ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி தொடங்கியுள்ள இரக்கத்தின் சிறப்பு  யூபிலி ஆண்டு நிகழ்வுகளில் ஒன்றாக, ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் யூபிலி பொது மறைக்கல்வியுரை இடம்பெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, சனவரி 30, இச்சனிக்கிழமையன்று, முதல் பொது யூபிலி மறைக்கல்வியுரை இடம்பெற்றது. வானம் கார்மேகக் கூட்டங்களை நிறைத்து, காலநிலை குளிராக இருந்தது. ஆயினும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். இவர்கள் மத்தியில் காலை பத்து மணியளவில் திறந்த காரில் வலம்வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறைக்கல்வியை முதலில் இத்தாலியத்தில் ஆரம்பித்தார். அன்புச் சகோதர, சகோதரிகளே, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் புனிதக் கதவுகளைக் கடந்து செல்லும்போது, நம் ஆண்டவர் தம் அருளால், நம்மை வழி நடத்துகிறார், நம் தவறுகளையும் பொருட்படுத்தாது, நம்மோடு எப்போதும் இருப்பதற்கு வருகிறார். அவரின் மன்னிப்பின் தேவையை உணர்வதில் ஒருநாளும் சோர்வடையாதிருப்போம் என்று உரையைத் தொடங்கிய திருத்தந்தை, இரக்கத்திற்கும் மறைப்பணிக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி இன்று சிறப்பாகப் பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.

திருஅவை இரக்கத்தை அறிவித்து, அதன் ஊற்றுக்கு மக்களை அழைத்துச் செல்லும்போது, உண்மையான வாழ்வை அது வாழ்கின்றது என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் நமக்கு நினைவுபடுத்தினார். கிறிஸ்தவர்களாகிய நாம், நற்செய்தியின் மறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் வாழ்வின் அழகான தருணங்களைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு இயல்பாகவே நாம் முயற்சிப்பது போன்று, நாமும், இயேசு கிறிஸ்துவைச் சந்திப்பதன் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வதற்கு, சிறப்பாக அழைக்கப்பட்டிருக்கிறோம். தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களின் அனுபவமும் இதுவே. ஆண்டவரைச் சந்தித்த பின்னர், தாங்கள் யாரைச் சந்தித்தோம் என்று சொல்வதற்காக, அந்திரேயா, தனது சகோதரரான பேதுருவிடம் நேரிடையாகச் சென்றார் மற்றும் பிலிப்பு, நத்தனயேலைத் தேடிச் சென்றார். இயேசுவைச் சந்திப்பது என்பது, அவரின் அன்பை அனுபவிப்பதாகும். இந்த அன்பு, நம்மை மாற்றுகிறது. அதோடு, இந்த அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கு நம்மைக் கட்டாயப்படுத்துகிறது. கிறிஸ்துவைச் சுமந்து செல்பவர்களாக வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இறைத்தந்தையிடமிருந்து நாம் பெற்றுள்ள இரக்கம், நமது நன்மைக்காக மட்டுமல்ல, அனைவரின் நன்மைக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. இது இரக்கத்தின் கருவிகளாக, இரக்கத்தின் மறைப்பணியாளர்களாக நம்மை மாற்றுகின்றது. இத்தகைய மறைப்பணியாளர்களாக வாழ்வதன் வழியாக, நம் தனிப்பட்ட வாழ்வில் இரக்கத்தின் கொடைகளை, இன்னும் ஆழமாக அனுபவிக்க முடியும். இறைநம்பிக்கையாளர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் வாழ்வதற்கு நாம் அழைக்கப்பட்டிருப்பதை ஆழமாக உணர்வோம். இதனால், அனைத்து மக்களின் இதயங்களையும் நற்செய்தி தொடும் மற்றும் இறைவனின் அன்புக் கொடைக்கு மக்கள் தங்களைத் திறக்க இயலும்.

இவ்வாறு, இச்சனிக்கிழமை யூபிலி பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 31ம் தேதி இஞ்ஞாயிறன்று, இளையோரின் திருத்தூதராகிய புனித தொன்போஸ்கோ விழா சிறப்பிக்கப்படுவதை நினைவுபடுத்தினார். இளையோர் இப்புனிதரின் பாதையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். சாந்தா மார்த்தா இல்லத்தில் பணிசெய்த எல்வீரா அவர்கள் நோயினால் இவ்வெள்ளியன்று இறந்ததைக் குறிப்பிட்டு, அவரின் ஆன்மா நிறை சாந்தியடையவும், அவரின் கணவர் மற்றும் குழந்தைகளுக்காகச் செபிக்கவும் திருப்பயணிகளிடம் கூறினார். மேலும், இப்பொது மறைக்கல்வியில் கலந்துகொண்ட இத்தாலிய தேசிய மாற்றுத்திறனாளிகள் கழக உறுப்பினர்களிடம், உங்களின் இருப்பு, தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துச் சொல்கிறது, இறைவனின் கொடையாகிய மனித வாழ்வை எப்போதும் பாதுகாக்குமாறு கூறினார். இன்னும், உரோம் பொதுப் போக்குவரத்து கழகத்தினரை வாழ்த்திய திருத்தந்தை, இன்றைய சமூக வாழ்வின் தரம், வாகனங்களின் தரத்தை அதிகம் சார்ந்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் புகைகளைக் குறைப்பதற்கு எப்போதும் அதிகமாக ஈடுபடுமாறு வலியுறுத்தினார். இறுதியில் அனைத்துப் பயணிகளையும் வாழ்த்தி, தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.