2016-02-01 16:23:00

திருத்தந்தை, அர்ப்பண வாழ்வு வாழ்வோர் சந்திப்பு


பிப்.01,2016. திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் அர்ப்பண வாழ்வு ஆண்டின் நிறைவு நிகழ்ச்சிகளின் ஒரு கட்டமாக, அர்ப்பண வாழ்வு வாழும் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகளை, அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் இத்திங்களன்று சந்தித்து, தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்துறவியர்க்கென ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், அந்த நேரத்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இறைவாக்கு, அடுத்திருப்பவர் நிலை, நம்பிக்கை ஆகிய மூன்று சொற்களை மையப்படுத்திப் பேசினார். பணிந்து நடப்பது எல்லா நேரங்களிலும் எவ்வளவு கடினமாக இருக்கின்றது, துறவியரின் பணிவு, இராணுவத்தில் நிலவும் பணிவு அல்ல, ஆனால் அது, இறைமகன் மேற்கொண்டிருந்த பணிவாகும், சில துறவிகளின் பணிவு மிக உயரிய நிலையில் இருக்கும், இந்தக் கொடை இறைவாக்கு இயல்பைக் கொண்டது என்றும் கூறினார் திருத்தந்தை.

அர்ப்பண வாழ்வு வாழும் துறவிகள், தங்கள் இல்லங்களில் வாழும் வயதானவர்களை அடிக்கடி சென்று சந்திக்க வேண்டும், இவர்களே, இவர்களுக்கு முதலில் அடுத்திருப்பவர்கள் என்றும், கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாதவர்களின் துன்பங்களிலும், பிரச்சனைகளிலும் அவர்களைச் சந்தித்து ஆறுதலாக இருக்க வேண்டுமென்றும் கூறினார் திருத்தந்தை.

துறவற வாழ்வில் புறணி பேசுதல் எவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்த திருத்தந்தை, புறணி பேசும் துறவியர், தங்கள் குழுவுக்கு மத்தியில் குண்டை வீசும் பயங்கரவாதி என்றும் கூறினார்.

இறுதியாக, நம்பிக்கை பற்றியும் பேசிய திருத்தந்தை, துறவு இல்லங்களில் வயதானவர்கள் அதிகம் இருப்பதால், அவ்வில்லக் காரியங்களைச் செய்வதற்கு ஆள்கள் இல்லாமல் கஷ்டப்படுவது பற்றிக் கேட்கும்போது கவலையாக இருக்கின்றது, இறையழைத்தல்கள் அதிகரிப்பதற்கு, பணம் அல்ல, செபமே பதில் என்றும், அருள்சகோதரிகள் இல்லாமல் திருஅவை எப்படி இருக்கும் என்று கேட்டு, அவர்களின் பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார். துறவிகள் தங்கள் வாழ்வில் மதிப்பைத் தேடக் கூடாது, ஆனால் வலுவற்று இருப்போர்க்கு உதவ வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.    

அர்ப்பண வாழ்வு ஆண்டு, அர்ப்பண வாழ்வு வாழ்வோரின் நாளான பிப்ரவரி 2, இச்செவ்வாய் மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியோடு நிறைவுக்கு வரும்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.