2016-02-03 16:58:00

இரக்கமே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் அடித்தளம்


பிப்.03,2016. இரக்கம் என்ற சொல்லே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் அடித்தளமாக அமைந்தது என்று, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் João Braz de Aviz அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.

கர்தினால் Braz de Aviz அவர்கள் வழங்கிய இந்த பேட்டியில், 2014ம் ஆண்டு, நவம்பர் மாதம் துவங்கி, 2016ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முடிவுற்ற அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் முழுமையான ஒரு தொகுப்பை வழங்கியுள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் மேன்மையை அடிக்கடி நினைவுறுத்தி வந்துள்ளத் திருத்தந்தை, இந்த வாழ்வில் காணப்படும் குறைகளையும், சவால்களையும் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை என்று கர்தினால் Braz de Aviz அவர்கள் இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு, திருஅவையில் ஓர் இடைச் செருகலாகவோ, பின் குறிப்பாகவோ இல்லாமல், முழுமையான ஒரு வரலாற்று வளர்ச்சியாக உள்ளது என்பதை, இந்த ஆண்டில் உணர முடிந்தது என்று கர்தினால் Braz de Aviz அவர்கள் குறிப்பிட்டார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு திருப்பேராயத்தின் பொறுப்பாளர்கள், இவ்வாண்டில், உலகின் பல நாடுகளுக்குச் சென்று, 3 இலட்சத்திற்கும் அதிகமான இருபால் துறவியரைச் சந்தித்தது குறித்து, கர்தினால் Braz de Aviz அவர்கள் தன் மகிழ்வையும், நிறைவையும் வெளியிட்டார்.

ஆசியா, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு தழைத்து வளர்வது குறித்து, தன் மகிழ்வை வெளியிட்ட கர்தினால் Braz de Aviz அவர்கள், இப்புகுதிகளில் துறவியர் மேற்கொண்டு வரும் கடினமான பணிகள் குறித்தும் புகழ்ந்து பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.