2016-02-06 14:25:00

இது இரக்கத்தின் காலம் - நல்வழிப் பாதையின் முதலிரு அடிகள்...


ஒரு விமான நிலையத்தில் நடந்த உண்மை நிகழ்வு இது. விமானப் பயணத்திற்கெனக் காத்திருந்தவர்கள் பொறுமை இழக்கத் துவங்கினர். அவர்கள் செல்லவேண்டிய விமானம் அரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று சொல்லி, ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. எனவே, எல்லாப் பயணிகளும் எரிச்சலடைந்தனர். பார்க்கும் அனைத்துப் பணியாளர்களிடமும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். பணியாளர்களும், செய்வதறியாது, ஓடி ஒளிந்தனர்.

ஒரே ஒரு பணிப்பெண் மட்டும், பயணிகளிடம் அன்பாக, பொறுமையாகப் பேசி, அவர்களை ஓரளவு சமாதானப்படுத்தினார். ஒருவழியாக, விமானத்தில் அனைவரும் ஏறி அமர்ந்தனர். விமானத்திற்குள்ளும், அந்த பணிப்பெண் மட்டும் அனைவரிடமும் தொடர்ந்து கனிவுடன் நடந்துகொண்டார்.

இப்பெண்ணின் பொறுமையையும், கனிவையும் கண்ட ஒரு பயணி, அப்பெண்ணிடம், "நான் உங்கள் நிறுவனத்திற்கு உங்களைப்பற்றி எழுதி, உங்களுக்குப் பதவி உயர்வு தரும்படி சிபாரிசு செய்யப்போகிறேன்" என்று கூறினார். அதற்கு அப்பெண், "சார், நான் இந்த நிறுவனத்திற்காகப் பணியாற்றவில்லை. இயேசுவுக்காகப் பணியாற்றுகிறேன். இன்று காலை, நானும், என் கணவரும் எழுந்ததும், ஒன்றாக செபித்தோம்... இன்றைய விமானப் பயணம் எவ்வகையில் அமைந்தாலும் சரி, அப்பயணத்தில் நான் இயேசுவின் பிரதிநிதியாகச் செயலாற்ற வேண்டும் என்று இருவரும் செபித்தோம்" என்று கூறியபின், அப்பெண், தன் கனிவுப் பணியைத் தொடர்ந்தார்.

நல்வழிப் பாதையில் நாம் எடுத்துவைக்கும் முதலிரு அடிகள், பொறுமையும், கனிவும் என்றால், பயணம் இனிதாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.