2016-02-06 15:29:00

நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாக்க அழைப்பு


பிப்.06,2016. நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாக்கவும், வாழ்வதற்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கவும் வேண்டுமென்று உலகினர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி மாதச் செபக் கருத்துகள் குறித்த சிந்தனைகளை, காணொளிச் செய்தி வழியாக இவ்வெள்ளி மாலையில் வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இப்பூமி நம் பொதுவான இல்லம் என்பதையும், இதன் கனிகள் ஒவ்வொருவருக்கும் பலனளிக்க வேண்டும் என்பதையும் மத நம்பிக்கையாளரும், நம்பிக்கையற்றவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், நாம் வாழும் இந்த உலகில் நடப்பது என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறுமைக்கும், இப்பூமியின் நலிந்த தன்மைக்கும் இடையேயுள்ள உறவு, பொருளாதாரத்தையும் முன்னேற்றத்தையும் நிர்வகிப்பதற்கு வேறு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை முன்வைக்கின்றது என்றும் கூறினார்.  .

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசியுள்ள இந்தக் காணொளி, வனத்தின் வழியே கதிரவன் உதிக்கும் அதிகாலைப் பொழுதைக் காட்டும் காட்சியுடன் ஆரம்பமாகின்றது. அதைத் தொடர்ந்து, மீன்கள் கூட்டம், தாவரங்கள் இவற்றோடு பெரிய பெரிய மலைகளும் அதில் தெரிகின்றன. 

இலவசமாக வழங்கப்பட்டுள்ள படைப்பை, வருங்காலத் தலைமுறைகளுக்காகப் பாதுகாக்கவும், அதை நன்முறையில் பேணுவதற்கும் செபிப்போம் என்பது இம்மாதச் செபக்கருத்தாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.