2016-02-09 15:45:00

இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில் கந்தமால் மறைசாட்சிகள்


பிப்.09,2016. ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில், 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் படுகொலைகள் குறித்து இந்திய ஆயர் பேரவை கலந்துரையாடவிருக்கின்றது.

வருகிற மார்ச் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை பெங்களூருவில் நடைபெறவிருக்கும் இந்திய ஆயர் பேரவையின் ஆண்டு நிறைவுக் கூட்டத்தில், கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், கந்தமால் மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த விபரங்களை விளக்குவார்.

கந்தமால் மாவட்டத்தில் இந்து மதத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் நினைவாக, ஒடிசா கத்தோலிக்கத் திருஅவை, மறைசாட்சிகள் தினத்தை உருவாக்கியுள்ளது, இது தேசிய அளவில் சிறப்பிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒடிசா கத்தோலிக்கத் திருஅவை, கந்தமால் மறைசாட்சிகளுக்கு, முத்திப்பேறு பட்டம் வழங்குவதற்குரிய நடைமுறைகளைத் துவக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

2008ம் ஆண்டில் ஏறக்குறைய நான்கு மாதங்கள் இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளில் 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.