2016-02-12 16:37:00

ஈர்ப்புவிசை அலைகள் கண்டுபிடிப்பு: அறிவியலின் சாதனை


பிப்.12,2016. விண்வெளிப் பாதையில் உள்ள இரண்டு கருந்துளைகள் இணைவதன் மூலம் புவிஈர்ப்பு அலைகள் உருவாவதை பன்னாட்டு விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 100 ஆண்டுகளுக்குமுன் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் வகுத்த சார்பியல் கொள்கை உண்மை என்பது உணரப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பு, வானியல் அறிவியலில் வியக்கத்தக்க அடுத்த கட்டமாகவும், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பாகவும் போற்றப்படுகின்றது.

விண்வெளியில் சூரியனைப் போன்ற மிகப் பெரிய விண்மீன்கள் உள்ளன. அவை தங்களது வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக(black-hole) மாறும். அவை ஒன்றையொன்று சுற்றும்போது அண்டவெளியில்(space-time) அதிர்வுகள் ஏற்பட்டு அவை ஈர்ப்பு கவர்ச்சி அலைகளாக வெளியாகும் என்று, நூறு ஆண்டுகளுக்கு முன்பே இயற்பியல் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் அவர்கள் கணித்திருந்தார்.

 அந்தக் கணிப்பு சரியானது என்பதை அறிவியலாளர்கள் இப்போது உறுதி செய்துள்ளனர். இது குறித்து லிகோ (LIGO – Advanced Laser Interferometer Gravitational-Wave Observatory) திட்ட செயல் இயக்குநர் டேவிட் ரிட்ஸ், வாஷிங்டனில் இவ்வியாழன்ன்று நிருபர்களிடம் விளக்கியுள்ளார்.

விண்வெளியில் ஏதோ ஒரு இடத்தில் சூரியனை போன்று 29 மற்றும் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள் அல்லது விண்மீன்கள் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே மோதிப் பிணைந்துள்ளன. அந்த நிகழ்வால் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை இப்போது கண்டுபிடித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

அந்த இரண்டும் பிணைந்து சூரியனைவிட 62 மடங்கு பெரிதாக மாறிவிட்டது. இந்த நிகழ்வால் உருவான ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பிரபஞ்சத்தின் கீச்சுக்குரல் போல வெளிப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.