2016-02-12 16:30:00

ஐந்து தமிழக மாணவர்களுக்கு இளம் அறிவியலாளர் விருது


பிப்.12,2016. 'கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாகப் பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த இராமநாதபுரம் மாணவர்கள் ஐந்து பேருக்கு 'இளம் அறிவியலாளர்' விருது கிடைத்துள்ளது.

இந்தியாவில், தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் சண்டிகாரில் நடந்த 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன்ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா, அமிர்தா, கவியரசன் ஆகியோர் 'இளம் அறிவியலாளர் ' விருது பெற்றனர்.

'சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்தலாம்' என்று, இந்த ஐவரும் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரைக்காக, இந்த விருது கிடைத்துள்ளது.

மேலும், இந்தக் கட்டுரை மைசூருவில் 20 ஆயிரம் அறிவியலாளர்கள் பங்கேற்ற அனைத்துலக அறிவியல் மாநாட்டிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கடல் சங்குகளை வெப்பப்படுத்தி கிடைக்கும் கால்யசியத்தை உரமாகப் பயன்படுத்தினால், தாவரங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இது, இயற்கை உரம்; சுற்றுச்சூழலைப் பாதிக்காது. இதைப் பயன்படுத்திய தாவரங்களில் கிடைக்கும் காய், கனி, விதைகளிலும் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும். இவற்றைச் சாப்பிடுவதால் எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும் என்று இந்த   மாணவர்கள் கூறினர்.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.