2016-02-14 13:59:00

குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பலி


பிப்.14,2016. இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை நான்கு மணிக்கு இந்நாளின் மூன்றாவது முக்கிய நிகழ்வு தொடங்கியது. மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்திற்குத் திறந்த காரிலே சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இரு பக்கமும் மரங்கள் நிறைந்திருந்த இந்தச் சாலையில் வழிநெடுகிலும், மக்கள் திரண்டிருந்து திருத்தந்தையைக் கண்டு மகிழ்ந்தனர். குவாதலூப்பே அன்னை மரியா திருத்தல வளாகத்திலும் திருத்தந்தை திறந்த காரில் சென்று, குழந்தைகளையும் பெரியவர்களையும் ஆசிர்வதித்து புதிய பசிலிக்காவில் திருப்பலியைத் தொடங்கினார்.

உலகில் திருப்பயணிகள் பெருமெண்ணிக்கையில் செல்லும் இடம் மற்றும் இலத்தீன்  அமெரிக்காவைச் சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மிகவும் முக்கியமான இடம் குவாதலூப்பே அன்னை மரியா பசிலிக்கா. இங்கு நிறைவேற்றிய திருப்பலியில், அன்னமரியா எலிசபெத்தம்மாளைச் சந்தித்த நிகழ்வை மையமாக வைத்து மறையுரையாற்றினார் திருத்தந்தை. குவாதலூப்பே அன்னை மரியா, பூர்வீக இனத்தவரான புனித ஹூவான் தியெகோ என்ற மனிதரில், இந்த அமெரிக்கப் பூமியில் வாழும் மக்கள் மத்தியில் வாழ விரும்பினார். அன்னை மரியா, ஆசிர்வதிக்கப்பட்ட இந்த மெக்சிகோ பூமியின் வளர்ச்சியில் தொடர்ந்து துணை நிற்கிறார். மேலும், 1531ம் ஆண்டில் புனித ஹூவான் தியெகோ அவர்களுக்கு நிகழ்ந்த புதுமை பற்றிக் குறிப்பிட்டு, துன்புறுவோர், புறக்கணிக்கப்பட்டோர், இந்தப் பூமியில் மதிப்பான இடம் இல்லை என உணர்வோர் ஆகியோரைக் கடவுள் உயர்த்துகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.இத்திருப்பலியின் இறுதியில் மெக்சிகோ நகர் கர்தினால் ரிவெரா கரேரா அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி கூறினார். பின்னர், குவாதலூப்பே புதுமை அன்னை மரியா திருப்படத்திற்கு, கிரீடம் அணிவித்து செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளாகிய ஆண்டவரே, நீர், வலியோரைத் தாழ்த்தி, தாழ்ந்தோரை உயர்த்துகிறீர். இந்த உம் ஊழியர்களைக் கனிவுடன் கண்ணோக்கும். இவ்வுலகில் தாழ்மையானவைகளை நாடித் தேட உதவும். இதனால் நாங்கள் ஒருநாள் உயர்த்தப்படுவோம் என்று செபித்தார் திருத்தந்தை. பின்னர் அனைவருக்கும் தனது ஆசிரையும் அளித்தார். அப்பசிலிக்காவின் தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். இந்நிகழ்வில் ஏறக்குறைய பத்து இலட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர் என்று கூறப்படுகின்றது. குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்திலிருந்து மீண்டும் திறந்த காரில் 16 கிலோ மீட்டர் தூரம் சென்று, மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்தை இரவு 8.15 மணியளவில் அடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு வளாகத்தில் விசுவாசிகள் கூட்டமாகக் காத்திருந்தனர். அவர்களிடம் திருத்தந்தை, உங்களுக்கு களைப்பாக இல்லையா, காலை நான்கு மணிவரைப் பேசுவோமா என்று கேட்டார். அதற்கு கூட்டத்தினர், சரி என்று ஒருசேரக் கத்தினர். இது கொஞ்சம் அதிகம்தான் என்று சொல்லி, அவர்களுடன் சேர்ந்து செபித்து, உங்கள் நண்பர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் நினைவில் கொள்ளுங்கள். பெரிய பிரச்சனையிலுள்ள உங்கள் பகைவரையும் நினையுங்கள். உங்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்குமாறும், உங்கள் நண்பர்கள் மற்றும் பகைவர்களுக்காகவும் அன்னைமரியா வழியாக இறைவனிடம் செபியுங்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் மெக்சிகோவில், திருத்தந்தையின் 2வது நாள் பயண நிகழ்வுகள் முற்றுப் பெற்றன.

ஆகட்டும் என்றுரைத்த பெண், கடவுளிடம் சரணடைய ஆகட்டும் என்றுரைத்தவர், தன் சகோதர சகோதரிகளுக்கு ஆகட்டும் என்றுரைத்தவர் மரியா. அவரின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்றுவோம். மெக்சிகோ இளைய முகத்தைக் கொண்டுள்ளது. இது, வருங்காலம் பற்றித் தியானிக்கவும், திட்டமிடவும், நம்பிக்கை வைக்கவும் வாயப்பளிக்கின்றது என்ற டுவிட்டர் செய்திகளையும் இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.