2016-02-14 14:28:00

மெக்சிகோ ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


பிப்.14,2016. சகோதர ஆயர்களே, இலத்தீன் அமெரிக்காவின் தென் கோடியிலிருந்து, பேதுருவின் வழித்தோன்றலாய் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ள நான், எவ்விதம் இந்நாட்டிற்கு வந்து, அன்னையைச் சந்திக்காமல் இருக்கமுடியும்?

இந்நாட்டின் கதவுகளையும், இப்பேராலயத்தின் கதவுகளையும் எனக்காகத் திறந்து விட்டதற்காக நன்றி சொல்கிறேன். இந்நாட்டின் ஆத்மார்த்தமான எண்ணங்களை, அன்னை மரியாவைத் தவிர வேறு யாராலும் எடுத்துரைக்க முடியாது. இந்நாட்டுக் குழந்தைகளின் பல்வேறு மொழிகளைப் புரிந்துகொண்டு, கனிவுடன் பதில் சொல்லக்கூடியவர், அந்த அன்னை மட்டுமே.

புனித ஹுவான் தியேகோ (Juan Diego)வைப் போலவே, நானும், குவாதலூப்பே அன்னையைக் காணும் ஆவலை உள்ளத்தில் வளர்த்து வந்துள்ளேன். இந்த அன்னையின் கனிவுப் பார்வை என் உள்ளத்தில் தூண்டும் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

கனிவுப் பார்வை

அனைத்து மனிதரின் உள்ளங்களையும் வெல்லக்கூடியது, இறைவனின் கனிவு என்பதை, குவாதலூப்பே அன்னை மரியா சொல்லித் தருகிறார். அனைத்து வல்லமையும் கொண்ட இறைவன், மக்களை தன்வயப்படுத்துவது, தன் சக்தியால் அல்ல, மாறாக, தன் இறை அன்பின் சக்தியற்ற நிலையைக் கொண்டே அவர் மக்களை வெல்கிறார்.

மெக்சிகோ நாட்டின் வரலாறு, மோதல்களும், இரத்தமும் நிறைந்ததென்பது எனக்குத் தெரியும். இந்த வரலாற்றில் அன்னை வழங்கிய ஒய்வு, இந்நாட்டிற்கு தொடர்ந்து வாழ்வை வழங்கியுள்ளது. இந்த ஒய்வு நமக்குத் தேவை என்ற உணர்விலிருந்து நீங்கள் துவங்கவேண்டுமென உங்களை அழைக்கிறேன்.

உங்கள் மக்கள்முன் தலைவணங்கி நில்லுங்கள். மரியாதையோடு, அமைதியாக அவர்களை அணுகிச் செல்லுங்கள். துன்பம், மரணம் ஆகியவற்றோடு பழகும்போது, நம்பிக்கையும், துணிவும் பெற வழி பிறக்கும் அல்லவா? தங்களில் மட்டுமே திருப்தி கொண்டு கடவுளை ஒதுக்கும் மக்களுக்கு இது மாற்று மருந்தாக இருக்காதா?

ஆண்டவரின் அழைப்பை ஏற்று, பணியாற்ற நாம் அடியெடுத்துவைக்கும் இவ்வுலகம், மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது. இதுவரை நாம் சரியென்று பின்தொடர்ந்த எண்ண ஓட்டங்கள், கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாகி வருகின்றன. சக்தி நிறைந்த ஒரு சிலருக்காக, பலர் சக்தியிழந்து வாழவேண்டியுள்ளது. நமது தொழில்நுட்பங்கள், தூரங்களை அருகில் கொணர்கின்றன, அதே நேரம் அருகில் இருக்கவேண்டியவற்றை தூரமாக்குகின்றன.

இத்தகைய உலகில், மக்களின் உள்ளத்திலிருந்து எழும் குரல்களைக் கேட்கும்படி இறைவன் நம்மைப் பணிக்கிறார். மக்களின் குரலுக்கு பதில் தேவைப்படுகிறது.

உங்கள் முகங்களை மக்கள் காணும்போது, அங்கு, 'ஆண்டவரைக் கண்டவர்களை' (யோவான் 20:25) அவரோடு இருந்தவர்களை மக்கள் கண்டுகொள்ளவேண்டும். எனவே, புறம் கூறுதல், ஒருவரது பெயரைக் கெடுத்தல் போன்ற தேவையற்ற செயல்களில் உங்கள் சக்தியைச் செலவிடவேண்டாம்.

இளையோர் பக்கம் உங்கள் கனிவுப் பார்வை திரும்பவேண்டும். தங்கள் படகுகளையும், வலைகளையும் மறுகரையில் விட்டுவிட்டு (மாற்கு 1:17-18) வரவிழையும் இளையோரின் பார்வைகளை, உங்கள் பார்வைகள் சந்திக்கட்டும். பணத்திற்காகக் கொலைசெய்தல், போதைப்பொருள் வர்த்தகம் என்ற வலைகளில் சிக்குண்டிருக்கும் இளையோரை எண்ணி, கவலைப்படுகிறேன். இளையோரை ஈர்க்கும் இவ்வழைப்புக்களை குறைவாக மதிப்பிடாதீர்கள். இக்குற்றங்களைக் கண்டனம் செய்வதோடு நிறுத்திவிடாமல், ஒரு இறைவாக்கினருக்கு உரிய துணிவுடன், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் கடமை, மெக்சிகோ தலத்திருஅவைக்கு உள்ளது. இப்பிரச்சனைகளில் சிக்கியிருப்போரை அரவணைத்து, அவர்களுக்கு மாற்று வழிகளைக் காட்டவேண்டியது, மேய்ப்புப் பணியாளர்களின் கடமை.

கட்டியெழுப்பும் தொலைநோக்குப் பார்வை

பல்வேறு வண்ண இழைகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள குவாதலூப்பே அன்னை மரியாவின் மேல் போர்வை, இறைவனின் முகத்தையும், மெக்சிகோ மக்களின் முகத்தையும் காட்டுகிறது. எளியோரின் வழியே தன் முகத்தை வெளிப்படுத்திய இறைவனின் சுதந்திரத்தை, ஆயர்களாகிய நீங்கள் பெற்றிருக்கவேண்டும்.

மக்களின் மொழியை, இலக்கணத்தைப் பயின்று, அவற்றின் வழியே, அவர்களுக்கு இறைவனை அறிமுகப்படுத்திய உங்கள் முன்னோரின் எடுத்துக்காட்டினை மீண்டும் நீங்கள் கண்டுணர வேண்டும்.

மண்ணின் மைந்தர்கள் மீது தனிப்பட்டக் கனிவும், மரியாதையும் நீங்கள் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இம்மக்களிடம் விளங்கும் கலாச்சார வேர்கள், மெக்சிகோ நாட்டின் தனித்துவத்தை நிலைநிறுத்த மிகவும் தேவை.

தூங்காமல் விழித்திருக்கும் தொலைநோக்குப் பார்வை

புதிதாக எழும் கேள்விகளுக்கு, வழக்கமான, வரையறுக்கப்பட்ட பதில்களைத் தரும் செயலற்ற நிலைக்குள் நீங்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு முன் வாழ்ந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், விசுவாசிகள் ஆகியோரின் தோள்கள் மீது நீங்கள் இப்போது நிற்கிறீர்கள். இந்த உயரத்திலிருந்து, எதிர்காலத்தைத் தெளிவாகப் பார்த்து, திட்டங்களை வகுக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

மக்களிடம் உள்ள மத உணர்வை மதித்து, அதன் அடிப்படையில் மறைக்கல்வியை வழங்கும் வழிகளை வகுக்க, அயர்வின்றி, அச்சமின்றி முன்னேறிச் செல்லுமாறு உங்களை அழைக்கிறேன்.

மக்களிடமிருந்து பிரிந்து நிற்பதற்கு நமக்குள் எழும் சோதனைகளை வெல்வது அவசியம். மக்களுடன் நெருங்கியிருக்கவேண்டும் என்றும், அவ்வழியில் கடவுளைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் குவாதலூப்பே நமக்குச் சொல்லித் தருகிறது. ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர் என்பதையும் குவாதலூப்பே அன்னை மரியா சொல்லித் தருகிறார்.

உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அருள் பணியாளர்கள், தனிமையிலும், தளர்ச்சியிலும் துன்புறவிடாதீர்கள். அருள் பணியாளர்கள் மத்தியில் உறவை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

ஒருங்கிணைந்த, நலமளிக்கும் தொலைநோக்குப் பார்வை

குவாதலூப்பே அன்னை மரியா, கிறிஸ்துவை தன் உதரத்தில் தாங்கியிருக்கிறார். இறைவனின் உயிரளிக்கும் சக்தி, மெக்சிகோ நாட்டிற்கு உரித்தாகட்டும்.

இறுதியாக, ஒரு வார்த்தை. குடிபெயர்தல் என்ற சமுதாயப் பிரச்சனையை நீங்கள் திறமையாகச் சந்தித்துவரும் பாங்கிற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். பிரிந்துள்ள குடும்பங்களுக்கு நீங்கள் மருந்தாக இருப்பதற்கு நன்றி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.