2016-02-14 14:11:00

மெக்சிகோ தேசிய மாளிகையில் திருத்தந்தை வழங்கிய உரை


பிப்.14,2016. அரசுத் தலைவரே, அதிகாரிகளே, சகோதர ஆயர்களே, பெரியோரே, தாய்மாரே,

இரக்கம், மற்றும் அமைதியின் மறைப் பணியாளராக நான் இந்நாட்டிற்கு வந்திருப்பதோடு, குவாதலூப்பே அன்னை மரியாவை வணங்கி, அவரது பாதுகாப்பைப் பெற விழையும் ஒரு மகனாகவும் இங்கு வந்திருக்கிறேன். அந்த அன்னைக்கு நல்லதொரு மகனாக இருக்க முயற்சி செய்ய விழைகிறேன்.

செறிவு மிகுந்த கலாச்சாரம், வரலாறு, பன்முகத் தன்மை இவற்றைக் கொண்ட இந்நாட்டு மக்களுக்கு என் மரியாதையை செலுத்த விழைகிறேன். அபரிமிதமான இயற்கை வளங்களையும், பன்முக உயிரினங்களையும் கொண்ட இந்த நாடு, தன் தனி அடையாளத்தையும், பன்முகக் கலாச்சாரத்தையும் வளர்த்து வந்துள்ளது.

இன்று, மெக்சிகோ நாடு இளையோர் என்ற செல்வத்தை முக்கியமாகப் பெற்றுள்ளது. இந்நாட்டில், பாதிக்கும் மேற்பட்டோர் இளையோரே. இது, நம்பிக்கையையும், எதிர்கால வாய்ப்புக்களையும் வழங்குகிறது. இந்த உண்மை, நாம் கட்டியெழுப்ப விழையும் நாட்டையும், அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல விழையும் நாட்டையும் பற்றி நம்மை சிந்திக்க அழைக்கிறது.

அனைவருக்கும் கிடைக்கக் கூடிய பொதுவான நன்மை என்ற அடித்தளம், 21ம் நூற்றாண்டில் நலிந்து வருகிறது. பலருக்குக் கிடைக்கவேண்டிய செல்வங்களை, ஒரு சிலரே அனுபவித்து வரும் சூழல், ஊழலை வளர்க்கிறது. அந்நாட்டில், போதைப்பொருள் விற்பனை, வன்முறை, மனித வர்த்தகம், ஆள் கடத்தல், கொலை என்ற பல வடிவங்கள் எடுக்கிறது. நாட்டு முன்னேற்றம் தடைபடுகிறது.

இக்கட்டானச் சூழல்களில், தன்னலத்தை மறந்து, பொது நலனில் அக்கறை காட்டிய முன்னோர் பலரைக் கொண்ட இந்நாட்டின் வரலாறும், கலாச்சாரமும், தனித்துவம் மிக்கவை. இத்தகைய கலாச்சாரத்தையும், மனித வளத்தையும் கொண்டுள்ள இந்நாட்டில், உரையாடல், சமரசம் போன்ற முயற்சிகள் புதுவடிவம் எடுக்க முடியும்.

சமுதாய, கலாச்சார, அரசியல் தலைவர்கள், அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்பளிக்கும் சூழலை உருவாக்கும் கடமை பெற்றுள்ளனர். தகுதியான குடியிருப்பு, மதிப்பு தரும் வேலைவாய்ப்பு, உணவு, உண்மையான நீதி, உறுதியான பாதுகாப்பு, அமைதியான சூழல் என்ற அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க, தலைவர்கள் உழைக்கவேண்டும்.

இத்தகைய ஒரு முயற்சியில், மெக்சிகோ தலத்திருஅவை, அரசுத் தலைவருக்கும், அதிகாரிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

ஒரு மறைப் பணியாளராக, திருப்பயணியாக நான் இந்த நாட்டில் பயணிக்கத் தயாராக இருக்கிறேன். குவாதலூப்பே அன்னை மரியாவின் பரிந்துரைக்கு நான் என்னையே கையளிக்கிறேன். இரக்கம் மிகுந்த தந்தை, இந்நாட்டிற்கு ஒற்றுமையையும், அமைதியையும் வழங்குவாராக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.