2016-02-14 13:48:00

மெக்சிகோ நகர் தேசிய மாளிகையில் திருத்தந்தை


பிப்.14,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மெக்சிக்கோ திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளாகிய, பிப்ரவரி 13, இச்சனிக்கிழமையன்று, தலைநகர் மெக்சிகோ நகரில் தனது பயண நிகழ்வுகளை நடத்தினார். மெக்சிகோ நகருக்கும், இந்தியாவுக்கும் உள்ள கால இடைவெளி 11 மணி 30 நிமிடங்களாகும். இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்குத் திருத்தந்தை, தனது 2வது நாள் பயண நிகழ்ச்சிகளைத் தொடங்கியபோது, இந்திய நேரம் சனிக்கிழமை இரவு 8 மணி 15 நிமிடங்களாக இருந்தது. இந்நாளில் மெக்சிகோ நகரில், அரசுத்தலைவர் அலுவலகம் அமைந்துள்ள தேசிய மாளிகைக்கு முதலில் சென்று, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அம்மாளிகையின் மூன்றாவது மாடியில், மரியாதை நிமித்தம் அரசுத்தலைவர் Enrique Pena Nieto அவர்களைத் தனியே சந்தித்துப் பேசினார். அழகிய மொசைக் வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த, குவாதலூப்பே அன்னை மரியா படத்தைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. பின்னர் அரசின் முக்கிய அதிகாரிகள் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதன்பின்னர், அம்மாளிகையில் அரசு, சமூக மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்தித்தார். அரசுத்தலைவர் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர், உரை வழங்கிய திருத்தந்தை, அந்நாட்டின் இளையோரின் வருங்காலத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டார். இச்சந்திப்புக்குப் பின்னர், திறந்த காரில் ஏறி, மெக்சிகோ நகர் தேசிய மாளிகைக்கு முன்புள்ள அரசமைப்பு வளாகத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் வலம் வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகின் இரண்டாவது பெரிய இந்த வளாகத்தில் திருத்தந்தை வலம்வந்தபோது, இளையோர் கூட்டம், திருத்தந்தை எங்களைக் காண மீண்டும் வருவார் என்று உரக்கக் கூறினர். திருத்தந்தையின் ஆசிரைப் பெறுவதற்காக, அவரின் வாகனம் சென்றவிடமெல்லாம் மக்கள் ஓடோடிச் சென்றனர். கூட்டத்திலிருந்து ஒரு பெண், திருத்தந்தை பிரான்சிஸ், விலைக்கு வாங்க முடியாத ஒன்றை நான் உங்களுக்குக் கொடுக்க வைத்துள்ளேன், அதுவே எனது விசுவாசம் என்று கத்தினார். இம்மக்களை மகிழ்வித்து, அங்கிருந்து 800 மீட்டர் தூரத்தில் இருக்கின்ற, விண்ணேற்பு அன்னை மரியா பேராலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.