2016-02-17 15:02:00

மொரேலியா நகரில் திருத்தந்தை திருப்பலி


பிப்.17,2016. பிப்ரவரி 16, இச்செவ்வாயன்று மெக்சிக்கோ நாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் நடைபெற்ற நகரம் மொரேலியா. இந்நகரம், மெக்சிக்கோ நாட்டின், Michoacán மத்திய மாநிலத்தின் தலைநகரமாகும். இப்பகுதியை 1520களில் இஸ்பானியர்கள் ஆக்ரமித்தனர். 1541ம் ஆண்டில், இஸ்பானிய ஆளுனர் Antonio de Mendoza அவர்கள், Guayangareo பள்ளத்தாக்கில் Michoacán என்ற பெயரில் ஒரு நகரை அமைப்பதற்கு ஆணையிட்டார். பின்னர், 1545ம் ஆண்டில், இந்நகரின் பெயர் Valladolid என்று மாற்றப்பட்டது. மெக்சிக்கோ சுதந்திரப் போராட்ட மாமனிதர் José María Morelos அவர்களின் பெயரில், 1828ம் ஆண்டில் Valladolid நகரம், மொரேலியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1991ம் ஆண்டில், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய வளங்களிலும் இந்நகரம் இணைக்கப்பட்டது. புதிய இஸ்பெயினின் தோட்டம் என்றும் மொரேலியா நகர் அழைக்கப்பட்டது. மொரேலியா நகர் அமைந்துள்ள Michoacán மாநிலத்தின் பெரும்பகுதி வெப்ப நிலங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இப்பகுதியின் கடும் வெப்பம் இதற்கு ஒரு காரணம், அடுத்து, இப்பகுதியில் போதைப்பொருள் செடிகள் உற்பத்தியும், போதைப்பொருள் வர்த்தகமும் மலிந்து காணப்படுவது மற்றொரு காரணமாகும்.

பிப்ரவரி 16, இச்செவ்வாய், உள்ளூர் நேரம் காலை 7.15 மணிக்கு மெக்சிகோ நகர் திருப்பீடத் தூதரகத்திலிருந்து, 19 கிலோ மீட்டர் தூரம், எளிமையான ஃபியட் காரில் பெனித்தோ ஹூவாரெஸ் பன்னாட்டு விமான நிலையம் சென்று, அங்கிருந்து 210 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கின்ற மொரேலியா நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மொரேலியா, இராணுவ அதிபர் பிரான்சிஸ் முகிச்சா விமான நிலையத்தில், மொரேலியா பேராயர் கர்தினால் ஆல்பெர்த்தோ சுவாரஸ் இந்தா மற்றும் அரசு அதிகாரிகள் திருத்தந்தையை வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் 21 கிலோ மீட்டர் தூரம் சென்றார் திருத்தந்தை. அந்நகரின் “Venustiano Carranza” விளையாட்டு அரங்கம் செல்வதற்கு, ஒன்பது கிலோ மீட்டர் தூரம் திறந்த காரிலே சென்ற திருத்தந்தை. அந்த அரங்கத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கு மேற்பட்ட அருள்பணியாளர்கள், குருத்துவ மாணவர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர் மத்தியிலும் திறந்த காரில் சென்று, திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். பெருந்திரளான மக்கள் மஞ்சள் நிற பாப்பிறைக் கொடிகளை ஆட்டிக்கொண்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர். அந்த அரங்கத்தில் வெண்மை நிற உடையில் ஏராளமான அருள்பணியாளர்கள் இருந்தனர்.

வன்முறை, ஊழல், போதைப்பொருள் வர்த்தகம், மனித மாண்பு புறக்கணிப்படுதல் ஆகியவற்றின் மத்தியில், பூட்டிய அறைகளுக்குள் ஒதுங்கி வாழத் தூண்டும் சாத்தானின் சோதனைக்கு இடம் கொடாதீர்கள், வாழ்வில் இறைத்தந்தையின் இரக்கமுள்ள அன்பை அனுபவியுங்கள் என்று, அருள்பணியாளர்கள், குருத்துவ மாணவர்கள் மற்றும் அருள்சகோதரிகளிடம் தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை மறையுரையைத் தொடங்கிய போது உள்ளூர் நேரம் காலை பத்து மணியாகும். இந்திய நேரம் இச்செவ்வாய் இரவு 9.30 மணியாகும்.

இத்திருப்பலியில், Michoacan மாநிலத்தின் முதல் ஆயரும், பழங்குடி மக்களின் பாதுகாப்புக்காக உழைத்தவருமான ஆயர் Vasco Vasquaez de Quiroga (1470-1565) அவர்கள் பயன்படுத்திய திருப்பலி பாத்திரம் மற்றும் செங்கோலைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்த, தற்போதைய மொரேலியா பேராயர் கர்தினால் Alberto Suárez Inda  அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆயர் Vasco அவர்கள், "Tata Vasco" என்றே புதிய இஸ்பெயினின் பழங்குடி மக்கள் மத்தியில் அறியப்பட்டார். "Tata Vasco" என்றால், Purepecha மொழியில், அப்பா வாஸ்கோ என்று அர்த்தம்.  இத்திருப்பலியை நிறைவு செய்து அனைவரையும் ஆசிர்வதித்து, திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியா திருவுருவத்திடம் செபித்து, அதைத் தொட்டுக் கும்பிட்டார் திருத்தந்தை. பின்னர் மீண்டும் திறந்த காரில் விசுவாசிகள் மத்தியில் வந்த திருத்தந்தை, மொரேலியா பேராயர் இல்லம் சென்று மதிய உணவும் அருந்தினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.