2016-02-19 15:18:00

எல்லாக் குடிபெயர்வுகளும் போரிலே தொடங்குகின்றன


பிப்.19,2016. மத்திய கிழக்கில் கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றிய அறிவு, இப்பகுதி மீது கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும் பற்றுக்கான காரணத்தை அறிவதற்கு உதவுகின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களின் வாழ்வு, கலாச்சாரம் மற்றும் அவர்கள் விசுவாசத்திற்குச் சான்று பகர்வதையும் அறிய உதவுகின்றது என்று, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்கள் கூறினார்.

“ஐரோப்பிய சமூகங்களில் குடிபெயர்வோரின் சமயக்கூறுகள்” என்ற தலைப்பில் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில், உரையாற்றிய கர்தினால் Filoni அவர்கள், ஈராக்கிலுள்ள சிறுபான்மை கிறிஸ்தவ சமூகம், அந்நாட்டின் மெசபத்தோமியா பகுதியில், இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இப்பகுதியின் மொத்த மக்கள் தொகையில் 15  விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களாக இருந்தனர், ஆனால், தற்போது இது ஒன்று அல்லது இரண்டு விழுக்காடே என்றும் கூறினார் கர்தினால் Filoni.

ஆர்மேனியப் படுகொலை இடம்பெற்ற காலத்தில், கத்தோலிக்கரும், பிற கிறிஸ்தவ சபையினரும் என, 2 இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர், அன்று தொடங்கிய குடிபெயர்வு இன்றும் தொடர்கின்றது, எல்லாக் குடிபெயர்வுகளும் போரிலே தொடங்குகின்றன என்றும் கூறினார் கர்தினால் Filoni.

“ஈராக்கில் திருஅவை:தொடக்கமுதல் இன்றுவரை அத்திருஅவையின் வரலாறு,வளர்ச்சி மற்றும் மறைப்பணி” என்ற தலைப்பில் இக்கருத்தரங்கில், உரையாற்றினார் கர்தினால் Filoni.  

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.