2016-02-23 15:18:00

இரக்கத்தின் ஆண்டில் மரண தண்டனைகள் இரத்து செய்யப்பட அழைப்பு


பிப்.23,2016. மரண தண்டனைகள் இரத்து செய்யப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஞாயிறு மூவேளை செப உரையில் விடுத்திருக்கும் அழைப்பு, தெளிவாகவும், மரண தண்டனைகள் இரத்து செய்யப்பட வேண்டுமென்பதை மேலும் வலியுறுத்துவதாகவும் உள்ளது என்று ஜெர்மன் கர்தினால் Reinhard Marx அவர்கள் கூறினார்.

மரண தண்டனைகள் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கு எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சி, மனித வாழ்வைப் பாதுகாப்பதற்குப் பரந்த அளவில் இடம்பெற்றுவரும் நடவடிக்கையைக் குறித்துக் காட்டுகின்றது என்று கூறினார் கர்தினால் Marx.

“மரண தண்டனை இல்லாத உலகம்”என்ற தலைப்பில், உரோம் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பு, இத்திங்களன்று தொடங்கியுள்ள அனைத்துலக கருத்தரங்கு குறித்து Zenit செய்தி நிறுவனத்திடம் பேசிய, மியூனிக் பேராயர் கர்தினால் Marx அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

சான் எஜிதியோ அமைப்பின் இம்முயற்சியையும் பாராட்டிப் பேசிய கர்தினால் Marx அவர்கள், வாழ்வு இன்றி நீதி கிடையாது என்றும், இந்த இரக்கத்தின் ஆண்டில் மரண தண்டனைகள் இரத்து செய்யப்பட்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

கர்தினால் Marx அவர்கள், திருப்பீடத் தலைமையகச் சீர்திருத்தத்தில், திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் சி9 கர்தினால்கள் குழுவின் தலைவராவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.