2016-02-24 15:52:00

இலங்கையின் அமைதி மையத்திற்கு நிவானோ அமைதிப் பரிசு


பிப்.24,2016. இலங்கையின் அமைதி மற்றும் ஒப்புரவு மையம், நிவானோ (Niwano) அமைதிப் பரிசுக்கென இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் அமைதியையும், ஒப்புரவையும் உருவாக்க, திஷாணி ஜயவீர (Dishani Jayaweera) மற்றும் ஜயந்த செனெவிரத்ன (Jayantha Seneviratne) என்ற இருவரும் 2002ம் ஆண்டு உருவாக்கிய ஓர் அமைப்பு, ஜப்பான் நாட்டு நிவானோ அமைதி பரிசுக்கேனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைதியைக் கொணர, மதத் தலைவர்கள், பெண்கள், இளையோர் ஆகியோர் பெரும் பங்கு வகிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், இலங்கை அமைதி மற்றும் ஒப்புரவு மையம் செயல்பட்டு வருவதாக ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இந்தப் பரிசுக்குரியவரின் தேர்வில், 125 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் அடையாளப்படுத்தப்பட்டனர் என்றும், இவர்களில் இலங்கையைச் சேர்ந்த இவ்வமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதென்றும் ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

20 மில்லியன் யென் (1,20,00,000 ரூ.) மதிப்புள்ள இந்த பரிசுத் தொகை, மேமாதம் 12ம் தேதி, டோக்யோ நகரில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.