2016-02-24 15:33:00

வத்திக்கான் வானொலியில் 25 ஆண்டுகள் - அருள்பணி லொம்பார்தி


பிப்.24,2016. கடந்த 25 ஆண்டுகளில், செய்திப் பரிமாற்றம் என் வாழ்வின் முக்கியப் பணியாக அமைந்தாலும், மனித உறவுகளும் இவ்வாண்டுகளில் என் வாழ்வில் முக்கியப் பங்கு வகித்தன என்று வத்திக்கான் வானொலியின் தலைமை இயக்குனர், அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

வத்திக்கான் வானொலியில் 1991ம் ஆண்டு தன் பணியைத் துவக்கிய இயேசு சபை அருள்பணியாளர், லொம்பார்தி அவர்கள், இம்மாத இறுதியில், அப்பணியிலிருந்து ஒய்வு பெறுவதையடுத்து, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.

வத்திக்கான் வானொலி மையத்தில், பல்வேறு மொழிகளில் வழங்கப்படும் வானொலி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் இயக்குனராக முதல் 15 ஆண்டுகளும், 2005ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு வரை, வானொலியின் தலைமை இயக்குனராகவும் தான் பணியாற்றிவந்த வேளையில் பெற்ற பல அனுபவங்களை, அருள்பணி லொம்பார்தி அவர்கள் இப்பேட்டியில் நினைவு கூர்ந்தார்.

வத்திக்கான் வானொலியில் பணியாற்றிய அதே வேளையில், 2001ம் ஆண்டு முதல் ஏறத்தாழ பத்தாண்டுகள் வத்திக்கான் தொலைக் காட்சி மையத்தின் இயக்குனராகவும், 2006ம் ஆண்டு முதல் வத்திக்கான் வானொலி செய்தித் தொடர்பகத்தின் இயக்குனராகவும் தான் ஆற்றிவரும் கூடுதல் பொறுப்புக்கள் குறித்தும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

வானொலியைச் செவிமடுக்கும் இரசிகர்களிடமிருந்து வரும் கடிதங்கள் தனக்கு மிகுந்த மகிழ்வையும், மனநிறைவையும் தந்தன என்று சிறப்பாகக் குறிப்பிட்ட அருள்பணி லொம்பார்தி அவர்கள், உக்ரைன் நாட்டில், சோவியத் அரசு வீழ்ந்ததென்று வத்திக்கான் வானொலி அறிவித்ததைத் தொடர்ந்து, 40,000த்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் அனுப்பியிருந்த நன்றிக் கடிதங்களை சிறப்பாக நினைவுகூர்ந்தார்.

1931ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் துவங்கப்பட்டது முதல், கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக, இயேசு சபையினரின் பொறுப்பில் செயல்பட்டு வரும் வத்திக்கான் வானொலியில், தனக்கு முன் இயக்குனர்களாகச் செயல்பட்ட, Gianfranceschi, Soccorsi, Stefanizzi, Martegani, Tucci, Borgomeo ஆகியோரையும், இன்னும் பல்வேறு பொறுப்புக்களில் செயலாற்றிவந்த, Pellegrino, Farusi, Quercetti, Maffeo, Giorgianni, Moreau, Matis, Arregui, Gemmingen, Koprowski ஆகிய அனைத்து இயேசுசபையினரையும் அருள்பணி பெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள், பெயர் குறிப்பிட்டு, சிறப்பாக நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.