2016-02-25 16:12:00

'இருபால் துறவியரும், 21ம் நூற்றாண்டில் புலம் பெயர்தலும்'


பிப்.25,2016. 'இருபால் துறவியரும், 21ம் நூற்றாண்டில் புலம் பெயர்தலும்' என்ற தலைப்பில், உரோம் நகரில் அமைந்துள்ள Passionist துறவு சபையின் தலைமை இல்லத்தில் பிப்ரவரி 22 இத்திங்கள் முதல், 24, இப்புதன் முடிய கருத்தரங்கு நடைபெற்றது.

உலகின் பல நாடுகளிலும், புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள அருள் பணியாளர், இருபால் துறவியர், பொது நிலையினர் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கருத்தரங்கில், 21ம் நூற்றாண்டின் மிக முக்கியத் தேவையாக உள்ள புலம் பெயர்ந்தோர் பணி குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இத்தாலியை அடைந்துள்ள புலம் பெயர்ந்தோரில் 23,000த்திற்கும் அதிகமானோர், பல்வேறு பங்குகளிலும், துறவு இல்லங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் என்று இக்கருத்தரங்கில் பேசப்பட்டது.

ஆப்ரிக்க நாடுகளிலிருந்து இத்தாலியில் தஞ்சம் புகுந்துள்ளவர்களில் ஒரு பெண், எவ்விதம் தான் மனித வர்த்தகத்திலிருந்து தப்பித்ததையும், சோமாலி நாட்டு இளையவர் ஒருவர், தான் எவ்விதம் அரசுத் துறைகளால் துன்பம் அடைந்தார் என்பதையும் பகிர்ந்துகொண்டது, இக்கருத்தரங்கின் உச்சக்கட்ட அனுபவமாக இருந்ததென்று கருத்தரங்கில் கலந்துகொண்டோர் கூறினர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.