2016-02-26 15:25:00

ஜப்பானில் குறைந்துவரும் மக்கள் தொகை


பிப்.26,2016. ஜப்பானின் மக்கள் தொகை, 1920களுக்குப் பின்னர், முதல் தடவையாக கடும் வீழ்ச்சியைக் காட்டியுள்ளது என்று புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஜப்பானின் மக்கள் தொகை, கடந்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் குறைந்துள்ளது என்றும், 2050ம் ஆண்டில் அந்நாட்டினரில் 40 விழுக்காட்டினர் 65ம், அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்களுமாக இருப்பார்கள் என்றும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஜப்பானில் பிறப்பு விகிதமும், அந்நாட்டுக்குள் குடியேறுவோரின் எண்ணிக்கையும் குறைந்துவருவது இதற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதனால், அந்நாட்டில் மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்படும் என்று நீண்டகாலமாகவே மக்கள் தொகை ஆய்வு நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இப்பிரச்சனை இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

2010க்கும், 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜப்பான் நாடு 9,47,345 குடிமக்களை இழந்துள்ளது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.