2016-02-26 15:33:00

மத்திய ஆப்ரிக்கக் குடியரசு-புதிய அரசுத்தலைவர்மீது நம்பிக்கை


பிப்.26,2016. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், பல துன்பங்களுக்குப் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசுத்தலைவர், நாட்டை குழப்பமற்ற நிலையில் நடத்திச் செல்வார் என்று தலத்திருஅவை நம்புவதாக, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில், கடந்த மூன்றாண்டுகளாக இடம்பெற்ற வன்முறை மற்றும் குழப்பங்களுக்குப் பின்னர், நாட்டின் புதிய அரசுத்தலைவராகத் Faustin-Archange Touadéra அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய, Bangassou ஆயர் Juan José Aguirre Muños அவர்கள் இவ்வாறு கூறினார்.

செலேக்கா மற்றும் பலாக்கா இனத்திற்கு எதிரான புரட்சிக் குழுக்களால் உருவாக்கப்பட்ட வன்முறைகளால் மத்திய ஆப்ரிக்கக் குடியரசு மிகவும் துன்புற்றதைக் குறிப்பிட்டுப் பேசிய ஆயர் Aguirre அவர்கள், தற்போதைய அரசியல் சூழல் நம்பிக்கை தருவதாக உள்ளது என்று தெரிவித்தார்.

மத்திய ஆப்ரிக்கப் பகுதியில், குழப்பங்களை ஏற்படுத்தும் வன்முறை மிகுந்த LRA புரட்சிக்குழு, உகாண்டா அரசுக்காக, ஏறக்குறைய இருபது ஆண்டுகள் சண்டையிட்ட பின்னர், 2005ம் ஆண்டில் உகாண்டாவின் வடக்குப் பகுதியிலிருந்து விரட்டப்பட்டது. தற்போது, இந்தப் புரட்சிக்குழு, காங்கோவின் வடக்குப் பகுதி, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு மற்றும் தென் சூடானின் எல்லைப்புறங்களில் செயல்பட்டு வருகிறது என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.