2016-02-27 15:47:00

திருத்தந்தையின் இரக்கத்தின் வெள்ளிக்கிழமை நிகழ்வு


பிப்.27,2016. உரோம் நகருக்கு தென்கிழக்கே 24 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற காஸ்தெல் கந்தோல்ஃபோவுக்கு அருகிலுள்ள புனித சார்லஸ் மையத்திற்கு, இவ்வெள்ளி மாலையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி சென்று அங்குள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், வெள்ளிக்கிழமைகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவரும் ஆன்மீக மற்றும் சமூகநலப் பணிகளின் ஒரு பகுதியாக,  இம்மையத்திற்குச் சென்று, அங்குப் பணியாற்றுபவர்கள் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்துள்ளார் திருத்தந்தை.

அருள்பணி மாரியோ பிக்கி அவர்களால் உருவாக்கப்பட்ட, இத்தாலிய ஒருமைப்பாட்டு மையத்திற்குச் சொந்தமான புனித சார்லஸ் மையம், சமூகத்தில் மக்கள் தனிமைப்படுத்தப்படுவதைத் தடை செய்யவும், அந்நிலைக்கு எதிராகவும், குறிப்பாக, போதைப்பொருளுக்கு அடிமையாவதை நிறுத்தவும் உழைத்து வருகிறது.

தற்போது புனித சார்லஸ் மையத்தில், போதைப்பொருளுக்கு அடிமையான 55 பேர், அதிலிருந்து குணமாவதற்கு உதவிகள் பெற்று வருகின்றனர்.

மேலும், வருகிற மார்ச் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை, திருத்தந்தையும், திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகளும், அரிச்சாவில் ஆண்டு தியானம் செய்யவுள்ளனர். மரியின் ஊழியர் சபை அருள்பணி எர்மெஸ் ரோன்க்கி அவர்கள் இத்தியானச் சிந்தனைகளை வழங்குவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.