2016-03-04 16:41:00

பள்ளிக்குச் செல்லாத சிறுமியர், சிறுவரைவிட 2 மடங்கு அதிகம்


மார்ச்,04,2016. உலகில் 6 வயதுக்கும் 11 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 1 கோடியே 60 இலட்சம் சிறுமிகள் பள்ளிக்குச் சென்றதே கிடையாது, இவ்வெண்ணிக்கை, இந்த வயதில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.

மார்ச்,08ம் தேதி கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு இத்தகவலை வெளியிட்டுள்ள, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோ, பள்ளிக்குச் செல்லாத சிறுவர், சிறுமியர்க்கிடையே நிலவும் இடைவெளி குறித்து எச்சரித்துள்ளது.

அரபு உலகம், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகள், தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் இந்த இடைவெளி அதிகமாக நிலவுகின்றது என்றும், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில், பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சிறுமிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 95 இலட்சம் என்றும், அதேசமயம் சிறுவரின் எண்ணிக்கை 50 இலட்சம் என்றும் யுனெஸ்கோ கூறியது.

தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் இத்தகைய சிறுமிகளின் எண்ணிக்கை 40 இலட்சம் என்றும், சிறுவரின் எண்ணிக்கை 10 இலட்சம் என்றும் யுனெஸ்கோ கூறியது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.