2016-03-07 15:32:00

புலம்பெயர்ந்தவர் பணி, அமைதி மற்றும் வாழ்வுக்கான அர்ப்பணம்


மார்ச்,07,2016. இத்தாலியில் புலம்பெயர்ந்தவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை உட்பட கிறிஸ்தவ சபைகள் இணைந்து ஆற்றும் பணிக்குப் பாராட்டுத் தெரிவித்த திருத்தந்தை, இது, அமைதி மற்றும் வாழ்வுக்கான தெளிவான அர்ப்பணத்தின் அடையாளம் என்றும் கூறினார்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் ஒன்றிணைத்து,  மற்றவர்க்கு வழிகாட்டியாக அமைந்துள்ள, கிறிஸ்தவ சபைகளின்  இந்தக் கூட்டுப்பணி, போர் மற்றும் வன்முறைக்கு அஞ்சி, புலம்பெயரும் மக்களுக்கு உதவுகின்றது என்று கூறினார்.

லெபனான், மொரோக்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் முகாம்களிலிருந்து இத்தாலிக்கு முதல் கட்டமாக, கடந்த மாதத்தில், உரோம் வந்துள்ள ஏறக்குறைய ஆயிரம் புலம்பெயர்ந்தவர்களில், நோயுற்றோர், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கைம்பெண்கள், சிறார் ஆகியோரும் உள்ளடங்குவர்.

உரோம் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பு, இத்தாலிய இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு, Waldensian மற்றும் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபை ஆகியவை இணைந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் இந்நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பா எதிர்கொள்ளும், புலம்பெயர்ந்தவர் குறித்த மிக மோசமான நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, துருக்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் Brusselsல் கூட்டம் ஒன்றை, இத்திங்களன்று தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும், படகு வழியாக, பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்கள், சட்டத்திற்குப் புறம்பே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நுழைந்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.