2016-03-11 16:15:00

இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள தீர்மான அறிக்கை


மார்ச்,11,2016. அருள்பணியினரை மையப்படுத்தாமல் இருத்தல், எளிமையான வாழ்வைப் பின்பற்றுதல், இயற்கையின் மீது அக்கறை கொண்டிருத்தல் ஆகிய அம்சங்களை இந்தியத் தலத்திருஅவை வெளிப்படுத்த வேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மார்ச் 2, கடந்த புதன் முதல், 9, இப்புதன் முடிய, பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ஆயர் பேரவையின் நிறையமர்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இந்தியாவின் 171 மறைமாவட்டங்களிலிருந்து, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட 178 ஆயர்கள், மறைமாவட்ட, மற்றும் பங்குத்தள மேய்ப்புப்பணியில், அனைவருக்கும் தெரியும்படியான ஒளிவு மறைவற்ற வழிமுறைகள் பின்பற்றப் படவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.

திருஅவைத் தலைவர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் அனைவரும் எளிமையான வாழ்வு முறையைப் பின்பற்றுவதால், ஏனைய மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழவேண்டும் என்று ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

இறை அழைத்தலை ஊக்குவித்தல், துறவற வாழ்வு, மற்றும் அருள் பணியாளர் பயிற்சி ஆகியவை, இன்றையச் சூழல்களுக்கு ஏற்றதாக அமையவேண்டும் என்றும் ஆயர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இன்றைய உலகின் போக்குகளால் குடும்பங்கள் சந்திக்கும் சவால்களுக்கு தகுந்த பதிலிறுப்பு வழங்குவதும் இந்தியத் திருஅவையின் கடமை என்பதை ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.