2016-03-15 17:00:00

இறை அன்பு குறித்து தெரிந்துகொள்ள சிலுவையை நோக்குங்கள்


மார்ச்,15,2016. இறைவன் நம்மீது வைத்திருக்கும் அன்பு குறித்து அறிய விரும்பினால், அவர் நமக்காக தன்னையே தியாகம் செய்த சிலுவையை உற்று நோக்குவோம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, ‘இருக்கிறவர் நானே’ என்பதை உணர்ந்துகொள்வீர்கள்”  என பரிசேயர்களை நோக்கி இயேசு கூறிய வார்த்தைகளை மையப்படுத்தி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கொள்ளிவாய்ப் பாம்பால் கடிபட்டவர்களை குணப்படுத்தும் நோக்கில், வெண்கலத்தால் செய்த கொள்ளிவாய்ப் பாம்பை கம்பத்தில் கட்டி உயர்த்தும்படி, இறைவன், மோசேயிடம் கூறி, மக்களைக் காப்பாற்றியதுபோல், இயேசுவும், நம் பாவங்களுக்காகவும், நம் மீட்புக்காகவும், சிலுவையில் உயர்த்தப்பட்டு, நம்மை காப்பாற்றினார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் மீட்பரின் கதை என்பது, கடவுளின் அன்பைப் பற்றிய கதை, அந்த அன்புக் கதையை அறிய வேண்டுமெனில், நமக்காக சிலுவையில் தொங்கிய இயேசுவை நாம் உற்று நோக்க வேண்டும் என, மேலும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.