2016-03-16 14:48:00

அமைதி ஆர்வலர்கள் : 2010ல் நொபெல் அமைதி விருது


மார்ச்,16,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக உள்ள வளாகத்திற்கு, சீன மனித உரிமை ஆர்வலர் முனைவர் Liu Xiaobo அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும். அப்படிப் பெயர் வைத்தாலாவது, அதை ஒவ்வொரு நாளும் பார்க்கும் சீன அதிகாரிகள், சிறையிலுள்ள Xiaobo அவர்களின் மனத்துணிச்சல் பற்றி கட்டாயமாக நினைவுகூர்வார்கள் என்று, அமெரிக்க செனட்டர் Ted Cruz அவர்கள் பரிந்துரைத்த மசோதாவிற்கு, அந்நாட்டு செனட் அவை அண்மையில் ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று, கடந்த பிப்ரவரி 22ம் தேதி ஒரு செய்தி(CNSNews.com) வெளியாகியிருந்தது. ஆனால் அமெரிக்க அரசுத்தலைவர், இந்த மசோதாவை ஏற்கமாட்டார் என்றும், இதற்கு சீன அரசின் வற்புறுத்தலே காரணம் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள Liu Xiaobo அவர்களுக்குத்தான் 2010ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. சீன மக்கள் குடியரசு என அழைக்கப்படும் சீனாவில் அடிப்படை மனித உரிமைகளுக்காக, Liu Xiaobo அவர்கள், வன்முறையற்ற வழியில் நீண்ட காலமாக, விடாஉறுதியுடன் போராடி வருவதற்காக இவ்விருது வழங்கப்பட்டதாக, நொபெல் விருதுக் குழு அறிவித்தது. சீனாவில் ஒருவர் இருந்துகொண்டே இத்தகைய விருது ஒன்றைப் பெற்ற முதல் சீனக் குடிமகனாகவும், சிறையில் அல்லது தடுப்புக்காவலில் இருக்கும்போது நொபெல் அமைதி விருது பெற்ற மூன்றாவது நபராகவும் உள்ளார்  லியு. ஜெர்மனியின் Carl von Ossietzky(1935), மியான்மாரின் ஆங் சான் சூச்சி(1991) ஆகிய இருவருக்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டபோது அவர்கள் தடுப்புக் காவலில் இருந்தனர். அதோடு, தனது பிரதிநிதி ஒருவர் இவ்விருதை நேரில் சென்று பெறுவதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டவர் Ossietzky. அவருக்கு அடுத்து, லியு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  

Liu Xiaobo அவர்கள், 1955ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி சீனாவின் Changchunல், அறிவாளிகள் குடும்பத்தில் பிறந்தார். இவர், சீனாவின் ஜிலின் பல்கலைக்கழகத்தில், சீன இலக்கியத்துறையில் 1977ம் ஆண்டில் சேர்க்கப்பட்டார். அச்சமயத்தில், இவர், தனது ஆறு வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து, “மாசற்ற இதயங்கள்” என்ற தலைப்பில் ஒரு கவிதைக் குழுவைத் தொடங்கினார். 1982ம் ஆண்டில் இலக்கியத்தில் இளங்கலை படிப்பை முடித்து, 1986ம் ஆண்டில் முனைவர் பட்டத்திற்கு, ஆய்வுகளையும் தொடங்கினார். தனது இலக்கிய விமர்சனங்களை, பல்வேறு இதழ்களில் பிரசுரித்தார். 1988ம் ஆண்டில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று உரையாற்றினார். இவரின் முற்போக்குக் கருத்துக்களுக்காக, “இருண்ட குதிரை” என்று பரவலாக இவர் அறியப்பட்டார். மேலும், அதிகாரப்பூர்வ கோட்பாடுகள் குறித்த இவரின் கடும் விமர்சனங்கள், இலக்கிய மற்றும் கருத்தியல்கோட்பாட்டு அறிஞர்களுக்கு அதிர்ச்சியை வரவழைத்தன. இது, “Liu Xiaobo அதிர்ச்சி” என்றும் பெயரிடப்பட்டது. இலக்கிய விமர்சகராகிய இவர், ஓர் எழுத்தாளர், பேராசிரியர், மனித உரிமை ஆர்வலர், சீனாவில் அரசியல் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுப்பவர் மற்றும் சீனாவின் ஒரே கட்சி கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டுமென்றும் அழைப்பு விடுப்பவர். மனித உரிமைகள் காக்கப்படுவதற்கு, லியு அவர்கள் எடுத்துவரும் முயற்சிகள், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. 2004ம் ஆண்டில், எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு, இவருக்கு, பிரான்ஸ் அறக்கட்டளை அமைப்பு விருதை வழங்கியது. பத்திரிகை சுதந்திரம் காக்கப்பட உழைப்பவர் என்று, அவ்வமைப்பு லியு அவர்களைப் பாராட்டியது.

லியு அவர்கள்  தற்போது, Jinzhouவில் அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்றார். சீனாவின் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களின் பெயருக்கு இழுக்கு ஏற்படும்படியான செய்தியைப் பரப்பினார் என்று குற்றம் சாட்டப்பட்டு, 2009ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர், புரட்சியைத் தூண்டும் செய்திகளைப் பரப்பினார் என்று குற்றம் சாட்டப்பட்டு, 1989ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை, சீனாவில் அதிகப்பட்ச பாதுகாப்புச் சிறைகளில் ஒன்றாகிய Qincheng சிறையில் இருந்தார். அச்சமயம், "மனம்வருந்தும் கடிதம்" ஒன்றில் இவர் கையெழுத்திட்டபோது விடுதலை செய்யப்பட்டார். பின்னர், சனநாயகம் மற்றும் மனித உரிமைகள் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக, 1995ம் ஆண்டு மே முதல், 1996ம் ஆண்டு சனவரி வரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சமூக ஒழுங்குமுறைக்கு இடையூறாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, 1996ம் ஆண்டு அக்டோபர் முதல், 1999ம் ஆண்டு அக்டோபர் வரை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் நான்காவது முறை கைது செய்யப்பட்டபோது உலக அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. 2010ம் ஆண்டில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கையெழுத்துகள் லியுவுக்கு ஆதரவாகப் பெறப்பட்டன.

2009ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி லியு அவர்கள், பெய்ஜிங் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், கானடா, சுவீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட, பல நாடுகளின் தூதர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இவர் தனது விசாரணையின்போது, நீதிமன்றத்தில் வாசிப்பதற்கென, “எனக்குப் பகைவர்கள் கிடையாது” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை தயாரித்து வைத்திருந்தார். ஆனால் லியு அவர்களுக்கு ஒருபோதும் பேச்சு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. இந்த அறிக்கை, 2010ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நொபெல் அமைதி விருது வழங்கப்பட்ட விழாவில் வாசிக்கப்பட்டது. ஆனால் லியு சிறையில் இருந்ததால் அவ்விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. இவர், 1988ம் ஆண்டில் ஹாங்காங் விடுதலை மாத இதழுக்குப் பேட்டியளித்தபோது, இன்று நாம் பார்க்கும் ஹாங்காங், நூறு ஆண்டுகள் காலனி ஆதிக்கத்திற்குப் பிற்பாடு இடம்பெற்றுள்ளது, அதேபோல் சீனாவில் உண்மையான வரலாற்று மாற்றம் இடம்பெற 300 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறியுள்ளார்.

“பேச்சுச் சுதந்திரம், மனித உரிமைகளின் அடித்தளம், மனித இயல்பின் ஆணிவேர் மற்றும் உண்மையின் அன்னை. பேச்சுச் சுதந்திரத்தைக் கொலை செய்வது, மனித உரிமைகளை அவமதிப்பதாகும், மனித இயல்பை நசுக்குவதாகும் மற்றும் உண்மைகளை அடக்குவதாகும்” என்று சொன்னவர் லியு. எவ்விதத் துன்பங்களுக்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் இந்த ஆர்வலர் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே நம் ஆவல்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.