2016-03-16 17:14:00

போதைப்பொருள் வர்த்தக வளர்ச்சியால் திருப்பீடம் கவலை


மார்ச்,16,2016. பல நாடுகளுக்கிடையே, வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டு, உலகெங்கும் வர்த்தகங்கள் செழித்து வருவதன் மறைமுக விளைவாக, பல குற்றச் செயல்பாடுகளும் உலகெங்கும் பரவி வருவதை, திருப்பீடம் கவலையோடு நோக்குகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

போதைப்பொருள் பிரச்னையை மையப்படுத்தி, வியென்னா நகரில் நடைபெற்ற 59வது ஐ.நா. கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், தடையற்ற வர்த்தக விரிவாக்கம், போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் வழிவகுத்துள்ளது குறித்து, தன் உரையில் கவலை வெளியிட்டார்.

போதைப்பொருள் வர்த்தகம் தன்னிலேயே ஒரு குற்றம் என்பதோடு, அதனுடன் தொடர்புடைய, கொலைகள், ஆள்கடத்தல், மனித வர்த்தகம் என்ற பல்வேறு குற்றங்களும் வளர்வதற்கு, இந்த வர்த்தகம் காரணமாக அமைந்துள்ளது என்று, அருள்பணி Urbańczyk அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வளர்ச்சி பெற்றுள்ள நாடுகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பதே இந்தக் குற்றத்தை வளர்க்க தூண்டுதலாக அமைகிறது என்று கூறிய அருள்பணி Urbańczyk அவர்கள், போதைப்பொருள் பயன்பாட்டின் அதிகரிப்பிற்குக் காரணமாக உள்ள பிரச்சனைகளை அகற்ற வளர்ச்சி பெற்ற நாடுகளின் அரசுகள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.