2016-03-22 16:15:00

உலக தண்ணீர் தினம் 2016 : தண்ணீரும் தொழில்களும்


மார்ச்,22,2016. 1990ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகில் 230 கோடிப் பேர் குடிநீர் வசதியைப் பெற்றிருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்று, யுனெஸ்கோ இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள் கூறியுள்ளார்.

மார்ச் 22, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக தண்ணீர் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவன இயக்குனர் பொக்கோவா அவர்கள், இன்று உலகில் எழுபது கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு இன்னும் சுத்தமான தண்ணீர் வசதி கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தண்ணீரும் தொழில்களும் என்ற தலைப்பில், இவ்வாண்டின் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ள பொக்கோவா அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் இடம்பெறும் தொழில் தொடர்புடைய 23 இலட்சத்துக்கு மேற்பட்ட இறப்புகளில் 17 விழுக்காட்டிற்கு, தொற்று நோய்கள் மற்றும் சுத்தமற்ற குடிநீரே காரணம் என்று தெரிவித்துள்ளார்.  

1993ம் ஆண்டு மார்ச் 22ம் தேதியன்று முதல் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பின்னர், தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22ம் நாளன்று இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.