2016-03-24 15:01:00

புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலி, மாலை வழிபாடு


மார்ச்,24,2016. புனித வியாழன், அருள்பணியாளர்களுக்குச் சிறப்பு நாள். இந்நாளில், நற்செய்தியின் மகிழ்வைப் பிறருக்கு வழங்குவதற்கு, மகிழ்வெனும் எண்ணெய்யால் திருப்பொழிவு செய்யப்படுவோம் என்ற செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், புனித வியாழன் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். புனித வியாழன், அருள்பணியாளர்களுக்கு முக்கியமான நாள் என்பதால், இத்திருப்பலியில், கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அருள் பணியாளர்கள் பங்கேற்றனர். பசிலிக்காவில் விசுவாசிகள் கூட்டமும் நிறைந்திருந்தது.

மேலும், இத்தாலியில் புகலிடம் கேட்டுக் காத்திருக்கும், பல நாடுகளின் குடியேற்றதார இளையோரை வரவேற்கும் மையம் அமைந்துள்ள Castelnuovo di Portoக்கு, புனித வியாழன் மாலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்கிறார்.

புனித வியாழன் மாலை வழிபாட்டின் ஒரு பகுதியாக, Castelnuovo di Portoவில், பன்னிரண்டு குடியேற்றதார இளையோரின் பாதங்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கழுவுகிறார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.