2016-03-24 15:17:00

புனிதஎண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியில் திருத்தந்தை மறையுரை


மார்ச்,24,2016. இவ்வியாழன் காலை, புனித பேதுரு பசிலிக்காவில் நிகழ்ந்த புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியில், அருள்பணியாளர்களுக்கென, சிறப்பான வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறையுரை வழங்கினார்.

அன்பு சகோதர, சகோதரிகளே, இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத் தொழுகைக் கூடத்தில் இறைவாக்கினர் எசாயாவின் பகுதியிலிருந்து வாசித்தபோது, நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று (லூக்.4,21) என்றார். அப்போது அங்கிருந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் உதிர்த்து மகிழ்வுக் கரவொலிகளை எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அதற்கு மாறாக நடந்துகொண்டார்கள் என்று நற்செய்தி சொல்கிறது. ஏழைகள், புறவினத்தார் ஒடுக்கப்பட்டோர் ஆகியோருக்கு இறைத்தந்தையின் வரையறையற்ற இரக்கத்தை இயேசு அறிவித்த இடத்தில் நாமும் நின்று, விசுவாச வாழ்வுக்கான நல்போராட்டத்தில் ஈடுபட அழைக்கப்படுகிறோம். நம் இறைவனின் இரக்கம் எல்லையற்றது மற்றும் விவரிக்க முடியாதது. புறக்கணிப்பும் வன்முறையும் ஆதிக்கம் செலுத்தும் பயனற்ற நிலத்தில் நாம் இந்த இரக்கத்தின் வல்லமையை அறிவிப்பதற்கு ஒவ்வொரு நாளும் வழிகளைத் தேடி, அதில் முன்னேற வேண்டும். நல்ல சமாரியரின் பாதை இதுவாக இருந்தது. இறைவனின் இரக்கம், நம் வாழ்வில் நாம் கற்பனை செய்வதற்கு அதிகமாகவே பொழியப்படுவதை நாம் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒருதுளி இரக்கத்தைப் பிடித்து வைப்பதற்காக, எதுவும் வீணாவதை இயேசு விரும்புகிறார். அருள்பணியாளர்களாகிய நாம், என்றென்றும் அதிகரிக்கும் மற்றும் அளவற்ற இறைத்தந்தையின் இரக்கத்திற்குச் சான்றுகளாகவும், திருப்பணியாளர்களாகவும் இருக்கின்றோம்.  இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இந்தப் புனித வியாழனன்று, நம் ஆண்டவர் இயேசு, மிக அதிக அளவில் இரக்கம் காட்டிய இரு பகுதிகள் பற்றிப் பேச விழைவதாக மறையுரையில் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்று, சந்திப்பு மற்றது இறைவனின் மன்னிப்பு என்று சொல்லி இவையிரண்டு பற்றி விளக்கினார்.

சந்திப்பில் இறைவன் தமது எல்லையற்ற இரக்கத்தை அதிகமதிகமாகக் காட்டுகிறார். ஒவ்வொரு சந்திப்பும் அகமகிழ்ச்சியைத் தருவதாக அமைகின்றது. இதை, இரக்கமுள்ள தந்தை உவமையில், தந்தை தனது மகன்மீது காட்டிய இரக்கத்தை வியந்து நோக்குகையில் உணர்கிறோம். திரும்பி வந்த தனது மகனை, சுதந்திரமாகவும், கரையற்ற அன்போடும் ஏற்ற தந்தையின் மகிழ்வை நாம் தியானிக்கும்போது, நம் நன்றியை அதிகமாகக் காட்டுவதற்குப் பயப்படத் தேவையில்லை. இயேசு குணப்படுத்திய பத்து தொழுநோயாளர்களுள், இயேசுவின் காலடியில் வீழ்ந்து நன்றி சொன்ன அந்த ஓர் ஏழைத் தொழுநோயாளியின் எண்ணம் நமக்கும் இருக்க வேண்டும். இரக்கம் ஒவ்வொரு மனிதரின் மாண்பைக் காக்கிறது. இதனாலேயே, அதிகப்படியான நன்றியுணர்வு, இரக்கத்திற்கு நாம் காட்டும் தகுந்த பதிலாக அமைகின்றது. நாம் விருந்தில் கலந்துகொள்ளும்போது, காணாமற்போன மகன் திரும்பிவந்ததை விரும்பாத மூத்த மகனின் பண்பைக் கைவிட்டு, முதல் தரமான ஆடைகளை அணிந்து, அகமகிழ்ந்து நன்றிகூரவேண்டும். இத்தகைய மகிழ்வுடன் பங்குகொள்வதன் வழியாகவே, நாம் செய்த தீமைகளைக் களைவது எப்படி என, தெளிவாகப் பார்க்க முடியும்.

ஒப்புரவு அருளடையாளத்திற்குச் சென்று திரும்பிய பின்னர், உண்மையிலேயே நான் மகிழ்கின்றேனா? அல்லது, மருத்துவரைச் சந்தித்து, நோய் பற்றிய ஆய்வு முடிவுகள் அவ்வளவு மோசமில்லை என்று தெரிந்துகொண்டு, அவற்றை ஒரு கவரில் போட்டு விடுவது போல, ஒப்புரவு அருளடையாளத்திற்குச் சென்ற பின்னர் அடுத்த காரியத்தில் உடனடியாக இறங்குகிறேனா? தர்மம் கொடுக்கும்போது, அதைப் பெறும் மனிதர் நன்றி சொல்வதைப் பார்த்து மகிழ்வதற்கும் நேரமில்லாமல், அடுத்த சொந்த காரியத்தில் வேகமாக இறங்கிவிடுகிறேனா? என்று சிந்தித்துப் பார்ப்போம் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அடுத்து, இறைவன் தமது மன்னிப்பில் எவ்வாறு அளவற்ற இரக்கத்தைக் காட்டுகிறார் என்பது பற்றியும் மறையுரையில் விளக்கினார் திருத்தந்தை.

நற்செய்தியில், இரக்கத்திற்காக மன்றாடிய ஊழியருக்குச் செய்தது போன்று, இறைவன், கணக்கிட முடியாத நம் கடன்களை மட்டும் மன்னிக்கவில்லை, ஆனால், கடன்பட்டதால் ஏற்பட்ட வெட்கத்திலிருந்தும் மீட்டு, உயர்ந்த மாண்பையும் நமக்கு அளிக்கிறார். மன்னிப்புப்பெற்ற பெண், கண்ணீரால் தம் கால்களைக் கழுவ, இயேசு அனுமதிக்கிறார். ஆதாம், ஏவாள் போன்று, நம் பாவங்களால் வெட்கமடையும்போது, நம்மை மறைத்துக்கொண்டு, தலையைக் கவிழ்ந்த வண்ணம் நடக்கின்றோம். இறைவன் நம்மை அளவுகடந்து மன்னிப்பதற்கு நாம் கொடுக்கும் பதில், மறைப்பணியின் நன்மைக்காக ஆண்டவரால் உயர்த்தப்படுவதற்கு அனுமதிப்பதாகும். அருள்பணியாளர்கள் என்ற முறையில், ஒதுக்கப்பட்ட மக்களோடு நம்மை ஒன்றுபடுத்துகிறோம். அதேநேரம், நாமும் அடிக்கடி விசுவாச ஒளியை இழந்தவர்களாய், பார்வையற்றவர்களாய் இருக்கிறோம் என்பதை நினைவுகூர வேண்டும். இயேசு இந்நிலையிலிருந்து நம்மை மீட்டு, இரக்கம் மற்றும் ஆறுதலின் திருப்பணியாளர்களாக நம்மை மாற்றுவதற்காக இவ்வுலகிற்கு வந்தார். இந்த யூபிலி ஆண்டில், நன்றி நிறைந்த உள்ளத்தோடு, இறைத்தந்தையைக் கொண்டாடுகிறோம். அவரின் இரக்கத்தை எப்பொழுதும் நினைவில் கொள்வதற்குச் செபிக்கின்றோம். நம்மை, பாவங்கள் மற்றும் தீமைகள் அனைத்திலுமிருந்து காப்பாற்றுமாறு செபிப்போம். இறைவனின் இரக்கத்தை எல்லா மனிதருக்கும் கொண்டு செல்வதற்கு ஏற்றவகையில் நம்மைப் புதுப்பிப்பதற்குத் தூய ஆவியாரின் அருளை இறைஞ்சுவோம்.

இவ்வாறு தனது மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.