2016-03-30 15:27:00

ஏமனில், ஒவ்வொரு நாளும் ஆறு சிறார் கொல்லப்படுகின்றனர்


மார்ச்,30,2016. ஏமன் நாட்டில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், சவுதி அரேபியா தலைமையில் வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறு சிறார் கொல்லப்படுகின்றனர், அல்லது, உறுப்புக்களை இழக்கின்றனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.

ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப், அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏமனில் கொல்லப்பட்டுள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் சிறார் என்று கூறியுள்ளது.

ஏமனில் பணியாற்றும் யூனிசெப் நிறுவனப் பிரதிநிதி Julien Harneis அவர்கள், ஏமன் நாட்டில், சிறார்க்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அவர்களுக்கு, விளையாடுவதும், தூங்குவதும்கூட அச்சுறுத்தலாக உள்ளன என்றும் கூறினார்.

ஏமனில் 82 விழுக்காட்டினருக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், 3,20,000 சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏறக்குறைய 1,600 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்றும், Harneis அவர்கள் தகவல்களை வெளியிட்டார்.

2015ம் ஆண்டு சனவரியில் ஏமனில் தொடங்கிய சண்டையில் 6,200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.