2016-03-31 15:53:00

காயமுற்றவர்களில் சிலர் நான்கு வயதுகூட நிறையாத குழந்தைகள்


மார்ச்,31,2016. ஏன் அடிபட்டோம், எவ்விதம் அடிபட்டோம் என்பதை அறியவும் முடியாத வயதில் இருக்கும் குழந்தைகள், வெடிகுண்டு தாக்குதலால் மிகுந்த வேதனையுறுவதை காண முடியாமல் தான் கலங்கியதாக, லாகூர் பேராயர் செபாஸ்டின் ஷா அவர்கள் கூறினார்.

உயிர்ப்பு ஞாயிறன்று லாகூர் நகர் பூங்காவில் ஏற்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் காயமுற்றிருக்கும் 340 பேரை மருத்துவமனையில் சந்தித்த பேராயர் ஷா அவர்கள், காயமுற்றவர்களில் சிலர் நான்கு வயதுகூட நிறையாத குழந்தைகள் என்பதை, Aid to the Church in Need என்ற பிறரன்பு அமைப்பிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

இத்தகையக் கொடுமைகளை மீண்டும், மீண்டும் சந்தித்து வரும் கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கையை இழக்காமல், தொடர்ந்து செபிக்கவேண்டும் என்றும், துயரங்களின் நடுவிலிருந்து கிறிஸ்து உயிர்த்ததைப் போல, கிறிஸ்தவ மறையும் பாகிஸ்தானில் உயிர்க்கும் என்று தன் மக்களுக்கு தான் கூறி வருவதாக, பேராயர் ஷா அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

2015ம் ஆண்டு முதல், விழா காலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு, வழங்கப்படும் பாதுகாப்பு அதிகரித்து வந்துள்ளது என்றும், இதை அறிந்த தீவிரவாதிகள், யாரும் எதிர்பாராத வண்ணம், பூங்காவில் தங்கள் தாக்குதலை மேற்கொண்டனர் என்றும் பேராயர் ஷா சுட்டிக்காட்டினார் என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் :  CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.