2016-04-01 16:43:00

கத்தாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர்


ஏப்.01,2016. கத்தாரில் 2022ம் ஆண்டின் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காகக் கட்டப்படும் அரங்கத்தில் வேலைசெய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், கட்டாயத் தொழில் உட்பட, திட்டமிட்ட உரிமை மீறல்களால் துன்புறுகின்றனர் என்று, Amnesty International என்ற உலக மனித உரிமைகள் அமைப்பின் புதிய அறிக்கை கூறுகிறது.

"அழகான விளையாட்டின் அசிங்கமான பக்கம்:2022ம் ஆண்டின் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தளத்தில் மீறல்கள்" என்ற தலைப்பில், இவ்வியாழனன்று அறிக்கை வெளியிட்டுள்ள இவ்வமைப்பு, அங்கு வேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உரிமை மீறல்களை விளக்கியுள்ளது.

சில நேரங்களில் தொழிலாளர்கள் கட்டாயமாக வேலையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அம்மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது, உலகக் கால்பந்து போட்டியின் மனச்சான்றின்மீது கறைப்படிய வைத்துள்ளது என்று, Amnesty International அமைப்பின் பொதுச் செயலர் Salil Shetty அவர்கள் கூறியுள்ளார்.

கத்தாரில், பணியிடங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து, இம்மனித உரிமைகள் அமைப்பு, தனது கடுமையான விமர்சனங்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும், உலகக்கோப்பை மைதானங்களைக் கட்டும் தொழிலாளர்கள் மீதான முறைகேடுகள் குறித்து நேரடியாகக் குற்றஞ்சாட்டியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக அமைக்கப்படும் அரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளரின் நிலைமை குறித்து அறிவதற்காக, இம்மனித உரிமைகள் அமைப்பு பேட்டி கண்ட மக்களில் பெரும்பாலானவர்கள், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தாரின் மொத்த மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.