2016-04-05 15:57:00

வத்திக்கான் அருங்காட்சியகம், இரத்த தானத்தை ஊக்குவிக்கின்றது


ஏப்ரல்,05,2016. மருத்துவமனைகளுக்கு இரத்தம் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு,   உரோம் மருத்துவமனைகளுடன் இணைந்து இரத்த தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது வத்திக்கான் அருங்காட்சியகம்.

மேற்குலக மாபெரும் கலாச்சாரப் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இம்முயற்சியில் இறங்கியுள்ள வத்திக்கான் அருங்காட்சியகம், உரோம் நகரின் Tor Vergata Policlinico (பொது மருத்துவமனை), மருத்துவமனை ஆன்மீகப் பொறுப்பாளர்கள், In punta di piedi என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவற்றுடன், இரத்த தான விழிப்புணர்வு நடவடிக்கையில் இணைந்துள்ளது.

Tor Vergata இரத்த தான மையத்தில் சான்றிதழ் பெறுபவர்கள், வத்திக்கான் அருங்காட்சியகத்தைப் பார்வையிட நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருக்கத் தேவையில்லை மற்றும் அவர்களுக்கு, நுழைவுக் கட்டணச் சீட்டிலும் சிறப்புத் தள்ளுபடி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

RossoArte அமைப்பின் முயற்சியால் இந்த ஆண்டு முழுவதும் இச்சலுகை உண்டு. இது குறித்த மேலும் விபரங்கள், வருகிற வியாழனன்று நடைபெறும் பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவிக்கப்படும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.